2012-01-23 15:59:30

போரின் கொடுமைகளிலிருந்து சிறார் பாதுகாக்கப்படுமாறு பான் கி மூன் வேண்டுகோள்


சன.23,2012. போரின் கொடுமைகளிலிருந்து சிறார் பாதுகாக்கப்படுமாறு, யூத இனப்படுகொலை நினைவு நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டனர் ஐ.நா.அதிகாரிகள்.
இரண்டாம் உலகப் போரின் போது நாத்சி வதைப்போர் முகாம்களில் கொல்லப்பட்ட சுமார் 60 இலட்சம் யூதர்கள் மற்றும்பிற எண்ணற்ற மக்களின் நினைவாக நியுயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
யூத இனப்படுகொலையில், 15 இலட்சம் யூதச் சிறார் அழிந்தனர், மாற்றுத்திறனாளிகள், ரோமா, சிந்தி இனத்தவர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்றும் பான் கி மூன் கூறினார்.
பலர் பசியினாலும் நோயினாலும் இறந்தனர், பலர் போரினால் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர், இந்தக் குழந்தைகள் உலகிற்கு எவ்வளவு நல்லவற்றைச் செய்திருப்பார்கள் என்று நமக்கு ஒருபோதும் தெரியாது என்றும் அவர் கூறினார்.
மனித சமுதாயத்தில் சிறார், மிகவும் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கு இவ்வுலகம் எவ்வளவு நல்லது செய்ய முடியும் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டுமென்று ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் சனவரி 27ம் நாள், அனைத்துலக யூத இனப்படுகொலை நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.