2012-01-23 15:53:30

திருத்தந்தை : கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு ஒவ்வொரு கிறிஸ்தவரின் மனமாற்றம் தேவை


சன.23,2012. “இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், மற்றும் உயிர்ப்பில் வேரூன்றிய தனிமனித மனமாற்றம் மூலம் மட்டுமே, கிறிஸ்தவ ஒன்றிப்பை அடைய முடியும்” என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பாகிய, பாவம் மற்றும் மரணத்தின் மீது அவர் அடைந்த வெற்றியைத் தியானிப்பதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம், இவ்வுயிர்ப்பு நிகழ்வானது, அவரில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களை உருமாற்றுகிறது மற்றும் முடிவில்லாத வாழ்வை அவர்களுக்குத் திறந்து விடுகின்றது என்று உரைத்தார்.
உலகில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகள் மற்றும் கிறிஸ்தவச் சமூகங்களால் இம்மாதம் 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்த சிந்தனைகளை இம்மூவேளை செப உரையில் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசத்தின் உருமாற்றக்கூடிய வல்லமையை உணர்ந்து ஏற்கும் போது, அது, கிறிஸ்தவர்கள் மத்தியில் முழு ஒன்றிப்பு ஏற்படுவதற்கான தேடலிலும் அவர்களுக்கு உதவுகின்றது என்றும் கூறினார்.
இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்துக்கென, போலந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை தேர்ந்தெடுத்த, “நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்குக் கிடைத்த வெற்றியினால் நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம்” என்ற தலைப்பு பற்றியும் குறிப்பிட்ட அவர், பல்வேறு துன்பங்களுக்கு எதிராகத் துணிவுடன் போராடிய நீண்ட கால வரலாற்றைப் போலந்து நாடு கொண்டுள்ளது என்றும் கூறினார்.
மாற்றம் என்பது முதலில் நம் ஒவ்வொருவரிலும் தொடங்கினால், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான நமது தேடல், உண்மை வடிவம் பெறும் என்பதை, போலந்து நாட்டின் அனுபவம் ஒவ்வொருவருக்கும் விளக்குகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
நம்மில் கடவுள் செயல்பட அனுமதித்தால், கிறிஸ்துவின் சாயலில் மாற்றுரு பெற நம்மை அனுமதித்தால், உண்மையான வெற்றியாகிய கிறிஸ்துவில் புதுவாழ்வில் நாம் நுழைந்தால் கிறிஸ்தவ ஒன்றிப்பு மிக எளிதில் எட்டக்கூடியதே என்றும் அவர் கூறினார்.
அனைத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் விளங்கும் காணக்கூடிய ஒன்றிப்பு, எப்போதும் கடவுளிடமிருந்து வரும் வேலையாகும் எனவும், நமது பலவீனத்தை ஏற்று இதை ஒரு கொடையாக ஏற்பதற்கு தாழ்மைப்பண்பைக் கடவுளிடம் கேட்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஒவ்வொரு கொடையும் ஓர் அர்ப்பணமாக மாறுகின்றது எனவும், நமது அன்றாட அர்ப்பணம், நாம் ஒருவர் ஒருவருக்குப் பிறரன்புப் பணி செய்வதாகும் எனவும் கூறினார் திருத்தந்தை.
வருகிற புதனன்று புனித பவுல் பசிலிக்காவில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் திருத்தந்தை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
மேலும், தூர கிழக்கு நாடுகளில் புதிய லூனார் ஆண்டைத் தொடங்கும் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை.
தற்போதைய உலகின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் மத்தியில் இப்புதிய ஆண்டு நீதி மற்றும் அமைதியின் ஆண்டாக அமையட்டும் எனவும், துன்புறுவோர் அனைவருக்கும், குறிப்பாக, இளையோருக்கு இவ்வாண்டு புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வரட்டும் எனவும் திருத்தந்தை வாழ்த்தினார்.







All the contents on this site are copyrighted ©.