2012-01-21 15:30:30

முபாரக் உட்பட யாருக்கும் மரணதண்டனை நிறைவேற்றவது அநீதியானது - கத்தோலிக்கத் திருஅவை


சன.21,2012. ஒருவர் பயங்கரமானக் குற்றங்களைச் செய்தவராய் இருந்தால்கூட, ஒருவரது உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று எகிப்தியக் கத்தோலிக்கத் திருஅவை உட்பட அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் கூறியுள்ளன.
எகிப்திய முன்னாள் அரசுத்தலைவர் ஹோஸ்னி முபாரக்கின் வழக்கு இவ்வாரத்தில் மீண்டும் விவாதிக்கப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் எழும்பியுள்ளதையடுத்து இவ்வாறு கூறினார் எகிப்தியக் கத்தோலிக்கத் திருஅவைப் பேச்சாளர் அருட்பணி Rafik Greiche.
மரணதண்டனை வழங்குவது, முஸ்லீம்களின் எண்ணத்தில் சாதாரணமான ஒன்றாக இருப்பது வருத்தமான விடயம் என்றும், கடும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதை எகிப்திய சட்டம் அனுமதிக்கின்றது என்றும் அக்குரு கூறினார்.
எகிப்தில், 2011ம் ஆண்டு சனவரியில் தொடங்கிய எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு எடுத்த நடவடிக்கையில் 850 பேர் இறந்தனர். இதற்குக் காரணமான முபாரக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சில நாட்களாக, அவர் விசாரிக்கப்படும் நீதிமன்றத்துக்கு முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.