2012-01-21 15:24:25

திருத்தந்தை, ரோமன் ரோட்டா உறுப்பினர்கள் சந்திப்பு


சன.21,2012. திருஅவை சட்டத்திற்கு கொடுக்கப்படும் விளக்கம், விசுவாசத்தின் உண்மைகளில் தனது சரியான விளக்கங்களைக் கண்டு கொள்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ரோமன் ரோட்டா என்ற வத்திக்கானின் உச்சநீதிமன்றம் புதிய ஆண்டைத் தொடங்குவதையொட்டி, அந்நீதிமன்றத்தின் 150 உறுப்பினர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருஅவையின் ஒவ்வொரு சட்டமும், இக்காலத் திருஅவையின் மறைப்பணியோடு எவ்விதம் தொடர்பு கொண்டுள்ளது என்பதையும் எடுத்துச் சொன்னார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள விசுவாச ஆண்டு பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, விசுவாசத்திற்கு அளிக்கப்படும் விளக்கம் பற்றியும் கூறினார்.
இரக்கம், சமத்துவம், உண்மையான நீதி நிர்வாகம் ஆகிய மூன்று பண்புகளும், திருஅவை சட்டத்திற்கான விளக்கம் மற்றும் அதனை அமல்படுத்துவதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும் திருத்தந்தை அவர்களிடம் எடுத்துரைத்தார்.
உண்மையான சட்டம், நீதியினின்று பிரிக்கப்பட முடியாதது என்றும் கூறிய திருத்தந்தை, சட்டத்திற்கு கொடுக்கப்படும் விளக்கம், உண்மை மீதான அன்பு, தேடல் மற்றும் சேவைக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார்.
ரோமன் ரோட்டா உறுப்பினர்கள், திருஅவையோடு சிந்தித்துச் செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
மேலும், ரோமன் ரோட்டாவின் புதிய ஆண்டுத் தொடக்கத்தையொட்டி இச்சனிக்கிழமை காலை திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருஅவையின் ஒரு நீதிபதி, சட்டத்துக்கு விளக்கம் அளிக்கும் போது, உண்மையின் ஒளியில் விசுவாசிகளின் வாழ்வை ஒளிரச் செய்வதாய் இருக்க வேண்டும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.