2012-01-21 15:26:54

ஜம்மு-காஷ்மீர் இசுலாமிய நீதிமன்ற ஆணைக்கு இந்தியத் தலத்திருஅவைத் தலைவர்கள் எதிர்ப்பு


சன.21,2012. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள இசுலாமிய நீதிமன்றம், ஒரு கத்தோலிக்கக் குரு உட்பட ஐந்து கிறிஸ்தவர்கள் அம்மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று கூறியிருப்பதைக் குறை கூறியுள்ளனர் தலத்திருஅவைத் தலைவர்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 1963ம் ஆண்டிலிருந்து மறைப்பணியாற்றி வரும் மில்ஹில் சபையின் அருள்தந்தை Jim Borst உட்பட ஐந்து கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டுமென இவ்வியாழனன்று ஆணை பிறப்பித்துள்ளது ஷாரியா இசுலாமிய நீதிமன்றம்.
இது குறித்துப் பேசிய இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப், ஒரு மதத்தின் சொந்தச் சட்டங்கள், மற்ற மதத்தவருக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று தெரிவித்தார்.
இந்தியாவில் ஷாரியா நீதிமன்றங்கள் சட்டரீதியான நிலைகளைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரின் இந்தியப் பகுதியில் வாழும் 40 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில் கிறிஸ்தவர்கள் ஐந்தாயிரத்துக்கும் குறைவே.







All the contents on this site are copyrighted ©.