2012-01-21 15:29:21

சூடானில் போரினால் பாதிக்கப்பட்ட இளையோருக்கு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகள் உதவி


சன.21,2012. ஆப்ரிக்க நாடான தென் சூடானில் போரினால் பாதிக்கப்பட்ட Jonglei மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் பணியில் இளையோரை ஈடுபடுத்தி வருகின்றது சூடான் கிறிஸ்தவ சபைகள் அமைப்பு.
Jonglei மாநிலத்தின் இளையோருக்கு அரசியல் ரீதியானத் தலைமைத்துவம் இல்லை எனவும், இம்மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே இடம் பெறும் தொடர் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர் எனவும் அவ்வமைப்பு கூறியது.
அப்பகுதியில் இளையோருக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பூர்வீக இனங்களின் தலைவர்களுக்கும் இடையே தொடர்பு கிடையாது என்றும் அவ்வமைப்பு கூறியது.
கடந்த ஆண்டு ஜூலையில் புதிய நாடாக உருவெடுத்த தென் சூடானில் அமைதியும் ஒற்றுமையும் தேவைப்படுகின்றது, ஆனால், Jonglei மாநிலத்தில் தொடங்கியுள்ள வன்முறை, அப்பகுதியில் பழிவாங்கும் தாக்குதல்களுக்கு இட்டுச் சென்றுள்ளன என்றும் அவ்வமைப்பு தெரிவித்தது.
இதற்கிடையே, தென் சூடானில் தொடர்ச்சியாக நடந்து வரும் மோதல்களில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையே சுமார் 20 வருடமாக இடம் பெற்ற சண்டை, 2005ம் ஆண்டில்தான் முடிவுற்றது.







All the contents on this site are copyrighted ©.