2012-01-20 15:43:55

திருத்தந்தை : புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருஅவை, இளம் அருட்பணியாளரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது


சன.20,2012. எந்தவிதப் பாரபட்சமுமின்றி, சகோதரத்துவத்திற்கும் திருஅவையின் உணர்வுக்கும் திறந்த மனம் கொண்டதாய், தூய வாழ்வில் வளர்வதற்கு மிகுந்த ஆவல் கொண்டதாய் ஓர் அருட்பணியாளரின் வாழ்வு அமைய வேண்டும் எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் Capranica குருத்துவப் பயிற்சி நிறுவனத்தின் சுமார் எழுபது உறுப்பினர்களை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இப்பயிற்சி நிறுவனத்தின் பாதுகாவலராகிய புனித ஆக்னஸ் பற்றியும் எடுத்துச் சொன்னார்.
விசுவாசத்திற்கு வீரமுடன் சாட்சியம் பகிரும் ஒரு மனிதர், கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவில், கிறிஸ்துவோடு வாழும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதை, கன்னியும் மறைசாட்சியுமான புனித ஆக்னசின் வாழ்வு உணர்த்துகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
குருத்துவ வாழ்வுக்கானப் பயிற்சியும், எல்லா நிலைகளிலும் ஒருங்கிணைந்ததாய், இறைவனோடும், தன்னோடும் தான் வாழும் குழுவோடும் ஓர் உறுதியான ஆன்மீக வாழ்வால் வழிநடத்தப்பட்டதாய் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நற்செய்தி மற்றும் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருஅவை, இளம் அருட்பணியாளரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது என்றும் உரைத்த திருத்தந்தை, இந்நிறுவனத்தில் வாழ்வோர், தங்களது அன்றாட வாழ்வில் கிறிஸ்துவோடு ஆழமாக ஒன்றித்திருப்பதன் மூலம், உண்மை மற்றும் மகிழ்வோடு குழுவில் வாழ முடியும் என்றும் தெரிவித்தார்.
கர்தினால் தொமினிக்கோ காப்ரானிக்காவால் 555 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இக்குருத்துவப் பயிற்சி நிறுவனத்தின் மரபுகளைக் கட்டிக் காக்குமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
சனவரி 21ம் தேதி புனித ஆக்னஸ் திருவிழா சிறப்பிக்கப்படுகின்றது







All the contents on this site are copyrighted ©.