2012-01-20 15:46:40

திருத்தந்தை - Neocatechumenate இக்காலத்திற்குத் தூய ஆவி வழங்கியுள்ள சிறப்புக் கொடை


சன.20,2012. வயது வந்தோரை கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் Neocatechumenate என்ற பணியில் ஈடுபட்டுள்ளோர், தங்களது விசுவாச வாழ்வின் அழகையும் கிறிஸ்தவராய் இருப்பதன் மகிழ்வையும் மீண்டும் கண்டுணர அழைக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை கூறினார்.
Neocatechumenal Way என்ற இயக்கத்தைச் சேர்ந்த சுமார் ஏழாயிரம் பேரை பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் இவ்வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்திற்குத் தூய ஆவி வழங்கியுள்ள சிறப்புக் கொடையாக இவ்வியக்கத்தினரைத் திருஅவை நோக்குவதாகவும் கூறினார்.
இவர்களின் பணி விலைமதிப்பற்றது என்றும், எப்பொழுதும் அப்போஸ்தலிக்கத் திருஅவையோடும் திருஅவையின் மேய்ப்பர்களோடும் இணைந்து செயல்படுமாறும் திருத்தந்தை இவர்களைக் கேட்டுக் கொண்டார்.
மேலும், திருப்பீட இறைவழிபாடு மற்றும் திருவருட்சாதனப் பேராயம், 15 ஆண்டுகளாக நடத்திய ஆய்வுக்குப் பின்னர் இந்த இயக்கத்திற்கான திருவழிபாட்டு முறைமை இவ்வெள்ளியன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 17 புதிய மறைப்பணிக் குழுவினரை இவ்வெள்ளியன்று திருத்தந்தை உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பினார்.
12 குழுக்கள் ஐரோப்பாவுக்கும், 4 குழுக்கள் அமெரிக்காவுக்கும், மற்றொன்று, ஆஸ்திரேலியா, பாப்புவா நியூ கினி மற்றும் உக்ரேய்னுக்கும் செல்கின்றனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடந்த ஆண்டுகளில், ஏற்கெனவே 40 குழுக்களை உலகின் பல இடங்களுக்கும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வியக்கம் சுமார் 10 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தற்போது உலகில் சுமார் நாற்பதாயிரம் குழுக்கள் நற்செய்திப்பணியிலும் ஈடுபட்டுள்ளன







All the contents on this site are copyrighted ©.