2012-01-20 15:54:53

சன 20, 2012. கவிதைக் கனவுகள்.......... குடும்ப விருட்சம்


ஒரே வீட்டில் வசித்து
ஒரே அடுப்பில் சமைத்தால் மட்டும்
அது குடும்பமாகாது.
எங்கு இலாப கணக்குகள் இல்லையோ
எங்கு நட்ட முறையீடுகள் இல்லையோ,
எங்கு தானாடி, தசையாடி தேனோடு பால் பொங்கும்
தெவிட்டாத இன்பமுண்டோ
அதுவே குடும்பம்.
ஆம். நட்பும், அன்பும், ஆதரவும், துயர் தாங்கலும்,
பழி ஏற்றலும், பகிர்தலும் ஓரிடம் கண்டால்
அதையே குடும்பம் என்போம்.
இது ஒரு வாச மலர்.
வீசும் தென்றல்.
அரவணைக்கும் அரண்.
கட்டிக் காக்கும் தலைவரும்,
மனப் புண்ணுக்கு மருந்திடும் மருத்துவரும்,
வாதாடி வழிகாட்டும் முதியோரும்,
நண்பராய் உடன்பிறப்புகளும்
ஒரே இடத்தில் காண முடிவதே குடும்பம்.
இங்கு அன்பு பெருக்கப்பட்டு,
துயரோ வகுக்கப்படுகிறது.
காலையின் தவறு மாலையில் மன்னிக்கப்படுகிறது.
குடும்பம். ஓர் அழகான விருட்சம்.
இலைகளும் கிளைகளும்
வேரும் விழுதுகளும்
அதன் தனிச்சிறப்பு.
வெட்டினாலும் மறுபடி பூக்கும்
முருங்கை மரம்.
அவ்வப்போது வளையும், ஒடியாது.
அப்படியே ஒடிந்தாலும் உடனே வளர்ந்து விடும்.
இலை, பூ, காய், பட்டை என பலவுண்டு.
அனைத்திற்கும் பலனுண்டு.
இது தவிர வேறென்ன வேண்டும்?








All the contents on this site are copyrighted ©.