2012-01-20 15:53:14

இலங்கையின் மனிதவள மேம்பாட்டிற்கு நூறு கோடி : இந்தியா


சன.20,2012. இலங்கையின் மனித வளத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவியை வழங்குவதற்கு இந்திய அரசு தீர்மானித்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார்.
இலங்கையில் தனது நான்கு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இவ்வியாழனன்று நாடு திரும்புகையில் நிருபர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த நிதி உதவி, இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிரித்து அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படிப்புகளுக்கு, இந்தியா நிதியுதவி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவித்த அவர், இவ்வுதவியினால், இலங்கையில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும என்றும் கூறினார்.
மாணவர்களின் கல்விக் கட்டணம், புத்தகங்கள், தங்கிப் படிக்கும் செலவு போன்றவை இந்திய அரசின் நிதி உதவியில் வழங்கப்படும் என்றும் கிருஷ்ணா கூறினார்.
மேலும், இந்திய நிதி உதவியில், காலே-ஹிக்காடுவா இடையே அமைக்கப்பட்டுள்ள இரயில் போக்குவரத்தையும் இப்பயணத்தின் போது எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைத்ததார்.
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன







All the contents on this site are copyrighted ©.