2012-01-20 15:52:19

இந்தியா தலையிட யாழ் ஆயர் கோரிக்கை


சன.20,2012. இலங்கை அரசுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியா மூன்றாம் தரப்பாகச் செயல்படுவதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இது தொடர்பான கடிதம் ஒன்றையும் யாழ் ஆயர் கொடுத்தார் என்று பிபிசி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் துரிதமாகவும், பயனுள்ளதாகவும் அமைவதற்கு இந்தியா அதில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும். அவ்வாறான பங்களிப்பின் மூலம் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணமுடியும் என்ற நோக்கத்திலேயே இந்த வேண்டுகோளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன்வைத்திருப்பதாக யாழ் ஆயர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ம் ஆண்டு விடுதலைப்புலிகள், இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்தியாவின் முன் முயற்சியின் மூலமாகவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆகவே பேச்சுவார்த்தைகள் பலனுள்ளதாக அமைவதற்கு இந்தியா அதில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாக இருப்பதாகவும் யாழ் ஆயர் கூறுகின்றார்.







All the contents on this site are copyrighted ©.