2012-01-19 14:46:24

மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் ஆன்மீகக் குருவின் செயல்பாடு


சன.19,2012. கப்பல் மூழ்கப்போகிறது என்பதை உணர்ந்ததும், கப்பலின் கோவிலில் இருந்த திருநற்கருணையைத் தான் அருந்தியதாகவும், பின்னர் மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்ததாகவும் ஓர் இத்தாலிய குரு கூறினார்.
கடந்த வாரம் வெள்ளியன்று இத்தாலியின் Giglio தீவுக்கருகே 4000க்கும் அதிகமான உல்லாசப் பயணிகளைச் சுமந்து சென்ற Costa Concordia என்ற கப்பல் மூழ்கியதில், 11 பேர் இறந்துள்ளனர், மற்றும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்தக் கப்பலில் ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டிருந்த 70 வயதான அருள்தந்தை Rafaeli Mallena, கப்பல் மூழ்கப் போகிறது என்பதை அறிந்ததும் தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கடல் பயணிகளின் ஆன்மீகப்பணி ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Giacomo Martinoவிடம் கூறினார்.
அருள்தந்தை Martino வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், கப்பலின் பணியாளர்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டனர் என்று ஊடகங்கள் கூறி வருவதை மறுத்துப் பேசியதோடு, Giglio தீவில் இருந்த பங்கு மக்களும், பங்குத் தந்தையும் இவ்விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்களுக்கு செய்த உதவிகளையும் எடுத்துரைத்தார்.
இந்தக் கப்பலில் பணி செய்த மும்பையைச் சேர்ந்த Jason D’Silva என்ற இளைஞன், கடவுளை நம்பி தான் கடலில் குதித்ததாகக் கூறினார். இவருடன் வேறு ஐந்து மும்பை இளைஞர்களும் இந்த விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளனர் என்று மற்றொரு செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.