2012-01-19 14:45:21

பிப்ரவரி 6-9 வரை உரோம் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் ஆயர் பேரவை பிரதிநிதிகள் மற்றும் துறவு சபைகளின் தலைவர்கள் கூட்டம்


இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள இந்த அகில உலகக் கருத்தரங்கில் 110 ஆயர் பேரவைகளின்
சன.19,2012. குழந்தைகளையும், வயதுவந்தோரில் வலுவற்றோரையும் காப்பதற்கு உலகளாவிய ஒரு முயற்சியில் கத்தோலிக்கத் திருஅவை ஈடுபட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த, ஆயர் பேரவை பிரதிநிதிகள் மற்றும் துறவு சபைகளின் தலைவர்கள் ஆகியோர் கூடிவரும் ஒரு கருத்தரங்கு வருகிற பிப்ரவரி மாதம் உரோம் நகரில் நடைபெற உள்ளது.
இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த அகில உலகக் கருத்தரங்கில் 110 ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகளும் 30 துறவு சபைகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
திருஅவையின் பணியாளர்களால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான சிறார்கள் குறித்து கடந்த சில ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவை பெருமளவு கேள்விகளுக்கு உள்ளானது. இந்தப் பிரச்னையை கத்தோலிக்கத் திருஅவை வெவ்வேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கவும், தெளிவுபடுத்தவும் இந்த கருத்தரங்கு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனையை ஒவ்வொரு மறைமாவட்டமும் கலந்துபேசி, அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்கள், கலாச்சாரம் இவைகளின் அடிப்படையில் தெளிவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் சென்ற ஆண்டு வழங்கிய சுற்று மடலுக்கு ஆயர் பேரவைகள் எடுத்துள்ள முயற்சிகள் இந்தக் கருத்தரங்கில் விளக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நலம் பெறுதலையும் மறுமலர்ச்சியையும் நோக்கி (Towards Healing and Renewal) என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த கருத்தரங்கின் விவாதங்களும், முடிவுகளும் கருத்தரங்கின் இறுதியில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள http://www.thr.unigre.it என்ற பன்வலை தலத்தை அணுகலாம் என்று ICN செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.