2012-01-19 14:44:26

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மறைமாவட்டம் பிற நாடுகளில் இருந்து எவ்விதப் பண உதவியும் பெறவில்லை - ஆயர் யுவான் அம்புரோஸ்


சன.19,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு தூத்துக்குடி மறைமாவட்டம் பிற நாடுகளில் இருந்து எவ்விதப் பண உதவியும் பெறவில்லை என்று அம்மறைமாவட்ட ஆயர் யுவான் அம்புரோஸ் கூறினார்.
மக்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு மக்களே நிதிகள் திராட்டி வருகின்றனர் என்றும், ஊடகச் செய்திகள் மறைமாவட்டத்தின் மீது அவதூறான செய்திகளை வெளியிடுகின்றன என்றும் ஆயர் அம்புரோஸ் இப்புதனன்று செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.
கடந்த நவம்பர் மாதம் இந்திய அரசின் உள்துறை பிரிவு தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு அனுப்பிய 32 கேள்விகளுக்குத் தாங்கள் பதிலனுப்பியதாகவும், அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக மத்திய அரசின் அதிகாரிகள் தூத்துக்குடி மறைமாவட்ட கணக்கு வழக்குகளை சோதனை செய்து வருகின்றனர் என்றும் ஆயர் கூறியதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பொய்யான பழிகளையும், வதந்திகளையும் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன என்று கூறிய ஆயர் அம்புரோஸ், வேறு பல மறைமுகமான நோக்கங்களுடன் செயல்படும் குழுக்களின் தூண்டுதலால் அவதூறான செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது மறைமாவட்டம் வழக்குத் தொடரவும் வாய்ப்புண்டு என்று சுட்டிக் காட்டினார்.
தங்கள் வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையில் செயல்பட இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து, கடந்த பல ஆண்டுகள் அவ்வப்போது எதிர்ப்புக்கள் எழுந்தாலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.