2012-01-18 15:06:08

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


சன 18, 2012. ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18 முதல் 25 வரை திருச்சபையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் குறித்து இப்புதன் பொது மறைபோதகத்தில் தன் கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இப்புதனன்று துவங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம், ஒன்றிப்பு எனும் கொடைக்காக வேண்டுமாறு கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. 'நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் வெற்றியால் நாம் அனைவரும் மாற்றம் பெறுவோம்' என்ற இவ்வாண்டின் செப வாரத்திற்கான தலைப்பு, கத்தோலிக்கத் திருஅவை மற்றும் போலந்து கிறிஸ்தவ சபைகளின் அவை பிரதிநிதிகளால் தேர்வுச் செய்யப்பட்டது. அடக்குமுறை மற்றும் சித்ரவதை குறித்த போலந்தின் அனுபவம், பாவம் மற்றும் மரணத்தின் மீது இயேசு கண்ட வெற்றி குறித்து ஆழமாகத் தியானிக்கத் தூண்டுகிறது. இயேசு கண்ட இந்த வெற்றியை நாம் விசுவாசத்தின் வழி பகிர்கிறோம். தன் போதனை, எடுத்துக்காட்டு மற்றும் பாஸ்கா மறையுண்மை வழி வெற்றிக்கானப் பாதையைக் காட்டினார் நமதாண்டவர். இந்த வெற்றியானது, உலக வலிமையால் அல்ல, மாறாக, அன்பாலும் ஏழைகள் மீதான அக்கறையாலும் பெறப்பட்டது. கிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாசமும், உள்மன மாற்றமும், தனிமனித நிலையிலும் சமூக அளவிலும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செபத்தோடு எப்போதும் இணைந்துச் செல்வதாக இருக்க வேண்டும். அனைத்துக் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், நம் மனங்கள் மாற்றம் பெற்று நற்செய்திக்கான ஒன்றிணைந்த சாட்சிகளாக விளங்கவும் உதவுமாறு நம் ஆண்டவராம் இயேசுவை நோக்கி இச்செப வாரத்தில் சிறப்பான விதத்தில் செபிப்போம். இதன்வழி நாம், புதிய நற்செய்தி அறிவித்தலுக்கு நம் பங்கை ஆற்றுவதோடு, இன்றைய காலத்தின் அனைத்து மக்களின் ஆன்மீகப் பசிக்கு முழுமையான விதத்தில் பதிலளிப்போம்.
இவ்வாறு, தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.