Aung San Suu Kyi தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மியான்மார் மக்கள் ஆர்வம்
சன.18,2012. பல ஆண்டுகளாக மியான்மாரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த Aung San Suu
Kyi, வருகிற ஏப்ரல் முதல் தேதி அந்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்களில் போட்டியிடுவதற்கு
தன் பெயரைப் பதிவு செய்ய இப்புதனன்று சென்றபோது, நூற்றுக்கணக்கான மக்கள் அவரை ஆர்வத்துடன்
பின்தொடர்ந்தனர். சமாதானத்துக்கான நொபெல் விருதைப் பெற்றுள்ள Aung San Suu Kyi, 1990ம்
ஆண்டு தேர்தல்களில் பெருமளவு வெற்றிபெற்றாலும், அவரைப் பதவியேற்க விடாமல் தடுத்த அந்நாட்டு
இராணுவ ஆட்சி, கடந்த 20 ஆண்டுகளாக அவரை வீட்டுக்காவலில் வைத்திருந்தது. கடந்த ஆண்டு
இவரை விடுதலை செய்ததோடு, குடியரசை நோக்கி அந்நாடு முன்னேறுவதற்கு அந்நாட்டின் இராணுவ
ஆட்சி ஒரு சில முயற்சிகளை மேற்கொண்டது. இம்முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் சனவரி
13ம் தேதி அந்நாட்டில் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. மியான்மார்
அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை உலகின் பல நாடுகள் வரவேற்றுள்ளன என்று ஆசிய செய்தி
நிறுவனம் கூறுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள்
அனைத்தும் மியான்மாருடன் எவ்வித அரசியல் தொடர்பும், வர்த்தகத் தொடர்பும் கொள்ளாமல் இருப்பது
குறிப்பிடத் தக்கது.