2012-01-17 14:47:01

வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொணர நைஜீரிய ஆயர் பேரவை அழைப்பு


சன.17,2012. நைஜீரியா நாட்டைச் செயலிழக்கச் செய்திருக்கும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொணர அந்நாட்டு அரசும் தொழிலாளர்கள் அமைப்புக்களும் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நைஜீரிய ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த வாரம் திங்கள் முதல் நைஜீரியாவில் பெட்ரோல் விலையேற்றத்தை மையப்படுத்தி நடந்து வரும் வேலை நிறுத்தம் அந்நாட்டினை மேலும் வறுமைக்கு இட்டுச் செல்லும் வழி என்று நைஜீரிய ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
ஏழைகளை மனதில் வைத்து போராடுவதாக ஒவ்வொரு குழுவும் கூறி வந்தாலும், இந்த வேலை நிறுத்தத்தால், ஏழைகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Felix Alaba Job கூறினார்.
கடந்த ஒரு வாரமாக நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தை நாட்டின் மீது அக்கறையில்லாத சமூக விரோதிகள் முன்னின்று நடத்துவதுபோல் உள்ளது என்றும் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, நைஜீரிய அரசுத் தலைவர் பெட்ரோல் விலையைக் குறைப்பதாக இத்திங்களன்று அறிவித்ததைத் தொடர்ந்து, எட்டு நாட்களாக நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தை நிறுத்திவிட்டு, இச்செவ்வாய் முதல் மீண்டும் பணிகளைத் தொடர்வதாக தொழிலாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.