2012-01-17 15:02:14

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 101 பாகம் 3


கடந்த 13ம் தேதி தினமலர் செய்தித்தாளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூகுள் (Google) மற்றும் பேஸ்புக்கில் (Face Book) அருவருக்கத்தக்க ஆபாசச் செய்திகளும், படங்களும் வெளியாகின்றன. இவை இந்தியக் கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும் வெகுவாகப் பாதிக்கின்றன. இந்நிலை நீடிக்குமானால், சீனாவில் பேஸ்புக் தடைசெய்யப்பட்டதைப்போல இந்தியாவில் கூகுள் மற்றும் பேஸ்புக் தடைசெய்யப்படும் என எச்சரித்திருந்தார்கள். இன்று வளர்கின்ற தலைமுறை அதிகமாக பயன்படுத்துகின்ற சமூக தொடர்பு வலைதளங்ளில் மிக முக்கியமான ஒன்று பேஸ்புக். அதில் இடம்பெறுகின்ற ஆபாசங்கள் வளர்கின்ற தலைமுறையின் எதிர்காலத்தை பாதிக்குமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை, எனவே இவை தடைசெய்யப்படும் என்ற எச்சரிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அன்பார்ந்தவர்களே! தன் வீட்டை நாட்டை சிறப்பாக வழிநடத்தத் தேவையானவற்றைக் கண்டறிந்த தாவீது மன்னன் அவற்றைச் செயல்படுத்துவேன் என உறுதிமொழி எடுத்தத் திருப்பாடல் 101ஐத்தான் கடந்த இரண்டு வாரங்களாக நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த வாரம்
மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்: எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்
என்ற இத்திருப்பாடலின் 2வது சொற்றொடரைத்தான் நாம் சிந்தித்தோம்.
இன்று 3வது சொற்றொடரைச் சிந்திப்போம்.
இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்: அது என்னைப் பற்றிக்கொள்ளாது.

இழிவானது என்றால் என்ன?
இழிவானது என்ற வார்த்தையின் எபிரேய மூலச்சொல் Belial. இதற்கு தீய, பயனற்ற, பொல்லாத, ஒழுக்கக்கேடான என பொருள் சொல்லலாம். ஆனால் இச்சொற்றொடரில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘இழிவான’ என்ற சொல்லின் வழியாக தாவீது மன்னன் என்ன குறிப்பிட விரும்புகின்றார், எதை மனதில் வைத்து இச்சொற்றொடரைப் பயன்படுத்தினார் என அறிவது அவசியம். ஏனெனில் இழிவானது என்பது மிகப்பொதுவான பரந்த பொருள் கொண்ட சொல். அதோடு இழிவானதென்பது ஆட்களுக்கு ஏற்றவாறும், சூழலுக்கு ஏற்றவாறும் மாறுபடுகிறது
தாவீது மன்னன் தன் பாவங்களைப் போக்கிக் கொள்ளவும், தீயோரை அழிக்கவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டதே இத்திருப்பாடலின் சிறப்பு. எனவே இங்கே குறிப்பிடப்படும் ‘இழிவானது’ என்பது பாவங்களை குறிப்பதாகவே இருக்க வேண்டும். ‘இழிவானது’ என்ற சொல்லின் வழியாக தாவீது மன்னன் பாவங்களை குறிப்பிடுகிறாரெனில், எத்தகைய பாவங்களைக் குறிப்பிடுகின்றார் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

நீதியற்ற முறையில் போர் தொடுப்பது, பாவத்தை விளைவிக்கக் கூடியவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்வது, அதிக வரிச்சுமையால் மக்களை ஒடுக்குவது, அநீதிக்கு ஒத்துழைப்புத் தருதல் போன்றவற்றை தாவீது மன்னன் இழிவானவைகளாகக் கருதியதாகவும் இனி இது போன்ற இழிவான காரியங்களைச் செய்ய மாட்டேன் என முடிவு எடுப்பதாகவும் விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதை ஒத்த நிகழ்வாக லூக்கா நற்செய்தி பிரிவு 19ல் இடம்பெறும் சக்கேயுவின் வாழ்க்கை மாற்றத்தை குறிப்பிட விரும்புகிறேன். சக்கேயு வரிவசூல் செய்ய தனக்குக் ஒதுக்கப்பட்ட பகுதியில், அளவுக்கு அதிகமாக வரி வசூல் செய்து, சொத்துச் சேர்த்து வைத்திருந்தார். ஆண்டவர் இயேசு வீட்டிற்குள் வந்ததும், தான் செய்தது தவறு என உணர்ந்து, வருந்தி, தான் அநீதியாகச் சேர்த்த பணத்தை ஏழைகளுக்கே கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார். இப்படி அநீதியாக சொத்து சேர்ப்பது இழிவானது, இனி இழிவான இந்தக் காரியத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன், இது வரை செய்ததற்காக மனம் வருந்துகிறேன் என்ற அவரது மனநிலையின் அடையாளமாகத்தான் நான் இந்த நிகழ்வைப் பார்க்கிறேன்.

'தன் கண்முன் வைக்கமாட்டேன்' என்று சொல்வதை, பிறருக்குச் சொல்லிக் கொடுக்க மாட்டேன், அது போன்ற செயல்களைப் பிறர் செய்ய உதவி செய்யமாட்டேன், எனக்காக இது போன்ற செயல்களைச் செய்ய பிறரை நியமிக்க மாட்டேன் என்றும், இழிவானவற்றை எனது கற்பனைகளில் கூட கொண்டு வரமாட்டேன், எனது சிந்தனைகளில் கூட அவற்றிற்கு இடமில்லை, இது போன்ற ஒன்றுக்கும் உதவாத, தீமையான செயல்களை இனி செய்யவே மாட்டேன் என உறுதிமொழி எடுப்பதாகப் பொருள் கொள்ளலாம் என விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
பிறரைப் பாதிக்கின்ற செயலைச் செய்தால் தான் பாவம் என்று இல்லை. மாறாக கற்பனை செய்தாலே அது பாவம் தான் என்பதை இயேசு சொல்கிறார். மத்தேயு 5 27,28
விபசாரம் செய்யாதே எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
நமக்கும், நமது வாழ்க்கை முறைக்கும் ஊறு விளைவிக்கின்ற காரணிகளை நாம் களையெடுக்க வேண்டும். நமது சிந்தனை, சொல், செயல் என எல்லாவற்றிலும் இழிவானவற்றைக் கண்டறிய வேண்டும். தாவீது மன்னன் அவர்தம் சூழலில் அவருக்கு, அவரது அரசுக்கு இழிவானவற்றைக் கண்டறிந்தது போல, இன்றையச் சூழலில் வாழும் நாம், நமக்கு இழிவானது எது? அதை நாம் ஏன் கண்முன் வைக்கக் கூடாது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அன்பார்ந்தவர்களே! அடுத்ததாக நெறிபிறழாமல் வாழ வேண்டும் என்று இச்சொற்றொடர் நமக்குச் சொல்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் பொய் சொல்லக்கூடாது, எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும் என்ற செய்தியை விளக்க என் சிறு வயதிலே அதிகமாகச் சொல்லப்பட்டது மிகவும் புகழ்பெற்ற அரிச்சந்திரனின் கதைதான். 'உண்மை' என்றால் அரிச்சந்திரன். அரிச்சந்திரன் என்றால் 'உண்மை' என்ற அளவுக்கு மனதில் பதிந்துவிட்ட கதை இது. இக்கதையில் அரிச்சந்திரனுக்கு இருந்த மற்றொரு பண்பு என்னவென்றால், கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவது. அரிச்சந்திரன் ஒரு போதும் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியதில்லையாம். ஒருநாள் விசுவாமித்திரர் வந்து, என்னுடைய கனவில் உன்னுடைய அரசை எனக்கு பரிசளிப்பதாக வாக்களித்தாய் என்று சொன்னதும், தன் மனைவி மற்றும் மகனை அழைத்துக் கொண்டு அந்த நாட்டை விட்டே சென்று விட்டனாம் அரிச்சந்திரன். அது கனவாக இருந்தாலும் சரி, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அரிச்சந்திரன்.

“யாவே இறைவனே உண்மையான இறைவன் அவர் சொல்லிக் கொடுத்த நியமங்களே உண்மையானவை. அவற்றைக் கடைபிடிப்பதே சிறந்தது. ஆனால் அவர் சொல்லிக் கொடுத்தவற்றை மறந்துவிட்டு, பிற கடவுள்களின் பிற மனிதர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டவர்களை நான் இனி நம்பப்போவதில்லை. அவர்களை நம்பி அரசாங்கப் பணிகளை ஒப்படைக்க மாட்டேன். அவர்களுக்கு எனது அரசில் இடமும் இல்லை. இதுவரை வழிநடத்திய யாவே இறைவனை விட்டு, அவரது கட்டளைகள விட்டு விலகி வேறுபாதைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என தாவீது உறுதிமொழி எடுக்கிறார். நல்லவர்களும், நேர்மையானவர்களும் உண்மையை விட்டு விலக மாட்டார்கள். தீயவர்களும், வீணாக அலைந்து திரிபவர்களும்தான் நெறிதவறுவார்கள். உண்மை மற்றும் நேர்மையை உதறித்தள்ளி ஓடுவார்கள். அப்படிப்பட்டவர்களோடு இருக்கும் தொடர்பை துண்டிப்பேன் அவர்களது குணம் என்னை தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்வேன் என்று சொல்கிறார்.

நெறிபிறழாமல் வாழ்ந்ததற்கு தலை சிறந்த உதாரணம் யோபு. யோபுவைப் பற்றிக் கேட்டிராத கத்தோலிக்கர் இருக்க முடியாது. என்ன சோதனை வந்தாலும் விசுவாசத்தில் நிலைத்திருந்திருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகின்ற மனிதர் யோபு. அவர் மிகப்பெரியச் செல்வந்தர். கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக அவர் வாழ்ந்து வந்தார்; இறைவனுக்கு அஞ்சி நடந்தவர். இறைவனின் அனுமதியுடன் தீயவன் யோபுவைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும் அவர் கடவுளைத் தூற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவரது மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் இறைவனின் நீதியை விளக்க முயன்றாரே ஒழிய இறைவனை தூற்றவில்லை. இறைநம்பிக்கையிலிருந்து சற்றும் விலகாத நெறிபிழாத மனிதராக உயர்ந்து நிற்கிறார் யோபு.

இன்னுமொரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அது நம் ஆண்டவர் இயேசுவின் வாழ்வுதான். பாலைவன வாழ்விலே அலகையினால் சோதிக்கப்பட்டார். நாற்பது நாள் உண்ணாமல் பசியாய் இருந்தபோதிலும், கல்லை அப்பமாக மாற்றவில்லை. அலகையை தெண்டனிட்டு வணங்கவில்லை. தம் தூதர்கள் தாங்கிக்கொள்வார்களா இல்லையா என சோதித்துப்பார்க்கவுமில்லை. இறுதியிலே, கெத்சமனியிலே பாடுகள்பட்டபோதும், தந்தை கொடுத்த பணியிலிருந்து சிறிதும் பின்வாங்காத சிறந்த ஊழியனாக, அன்பார்ந்த மகனாக நமக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
யோபுவும் சரி ஆண்டவர் இயேசுவும் சரி ஒரு போதுமே தாங்கள் எடுத்துக்கொண்ட முடிவிலிருந்து பின்வாங்கியதில்லை, நெறிதவறவில்லை. அவர்களைப் போல் நெறிதவறாதவர்களாக வாழத்தான் இத்திருப்பாடல் வழியாக தாவீது மன்னன் அழைப்பு விடுக்கிறார்.

அன்பார்ந்தவர்களே, ‘Look before you leap' என்று சொல்வார்கள். ஒரு செயலை செய்வதற்கு முன், இரண்டு முறை சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்து எடுக்கின்ற முடிவை மாற்றும்போது நமது நம்பகத்தன்மை குறைகிறது. அவர் அப்படித்தான் அவ்வப்போது முடிவை மாற்றிக்கொண்டே இருப்பார். சரியான ஒரே முடிவை எடுக்கத் தெரியாதவர் என்று சொல்வது நமது நம்பகமற்றத் தன்மையைக் காட்டுகிறது.
முடிவை எடுப்பதற்கு முன்பு நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். நமக்கு வரப்போகிற நன்மை, தீமைகளைக் கணக்கிட்டு அதில் நமக்கு ஏற்றதை முடிவு செய்ய வேண்டும். படிப்பதற்குத் தேர்ந்தெடுக்கக் கூடிய பாடமாக இருக்கலாம், பணியாற்ற முடிவு செய்கின்ற வேலையாக இருக்கலாம், பின்பற்ற விரும்பும் சமயமாக இருக்கலாம் அல்லது வாழ்க்கை சிறப்பாக அமைய நாம் எடுக்கின்ற உறுதிமொழிகளாக இருக்கலாம் நமது முடிவுகள் அலசி ஆராய்ந்து தெளிவாக எடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு எடுத்த முடிவைச் செயல்படுத்த எத்தகைய இடறல் வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் இலட்சியத்தை நோக்கி முன்னேற வேண்டும்.
எனவே அன்பார்ந்தவர்களே! நமது வாழ்க்கைக்கு இழிவானது எது என கண்டறிந்து தாவீது மன்னனைப் போல் அதை ஒதுக்கிவிட்டு, நாம் எடுத்த முடிவுகளில் நிலைத்திருந்து நெறிபிறழாமல் வாழ முயற்சி செய்வோம். இதுவே திருப்பாடல் ஆசிரியர் நமக்கு சொல்லித்தருகின்ற பாடம்.








All the contents on this site are copyrighted ©.