2012-01-17 14:46:27

கோவில் நிலத்தை அபகரித்த பாகிஸ்தான் அரசுக்கு தல திருஅவை கண்டனம்


சன.17,2012. நில அபகரிப்பிலிருந்து கோவில் நிலத்தைக் காப்பாற்றவே அதனை நிர்மூலமாக்கி கைப்பற்றியதாக பாகிஸ்தான் அரசு தற்போது நியாயப்படுத்த முயல்வது குறித்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள்.
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள நிலத்திற்கு அருகாமையில் 1264 சதுர மீட்டர் நிலத்தை தலத் திருஅவைக்கு லாகூர் மாநில அரசு வழங்க உள்ளதுடன் ஒரு பள்ளியையும் முதியோர் இல்லத்தையும் மாநில அரசு கட்டிகொடுக்க உள்ளதாக அறிவித்தார் லாகூர் மாநில அரசின் சிறுபான்மை துறை அமைச்சர் கம்ரன் மைக்கில்.
ஆனால், தகுந்த காரணங்கள் இன்றி கோவிலை இடித்ததை அரசு நியாயப்படுத்தியுள்ளதையும், நிலம் வழங்க முன்வந்துள்ளதையும் எற்க மறுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
அநியாயமாக திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களும் கட்டிடங்களும் திருப்பி வழங்கப்படும் வரை தங்கள் எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர உள்ளதாக அறிவித்தார் அருள்தந்தை மோரிஸ் ஜலால்.
கோவில்களையும் மதச்சின்னங்களையும் விவிலியங்களையும் சேதப்படுத்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்த முன்னாள் ஆங்கிலிக்கன் ஆயர் மனோ ருமால்ஷா, தங்கள் புனித நூலின் ஒரு பக்கத்தைக் கிழித்தாலே பல ஊர்களையும் நகர்களையும் கொளுத்துவோர், மற்ற மதத்தவரின் உணர்வுகளையும் மதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.