2012-01-16 13:28:17

வாரம் ஓர் அலசல் - மனித மாண்பு காக்க


சன.16,2012. பழையன எரித்து, புதியன உடுத்தி, பொங்கலும் உண்டு, புத்துணர்வுடன் புதிய நாளும் தொடங்கி விட்டது. மஞ்சுவிரட்டும் கண்டு களித்தாகிவிட்டது. “தை” யும் பிறந்து விட்டது. வழியும் பிறக்கும் என்ற நம்பிக்கையில் வழக்கமானப் பணிக்கும் ஆரம்பமாகி விட்டோம். இந்த உற்சாகமான சூழலில், ஊடகங்கள் ஊடே உலகை ஒருமுறை சுற்றி வந்தேன். சில தடித்த தலைப்புச் செய்திகள் கண்களை உறுத்தின. அவற்றில் ஒன்று, “மார்ட்டின் லூத்தர் கிங் இளையவர் (Martin Luther King, Jr) என்ற மாமனிதர் இல்லாமல் இருந்திருந்தால், அமெரிக்கர்களின் வாழ்க்கைமுறை இன்று எவ்வாறு இருந்திருக்கும்” என்பது பற்றிய செய்தி. அச்செய்தி, ஒரு கருத்துப் பகிர்வு விவாதமேடையாக பிரசுரமாகியிருந்தது. சனவரி 15ம் தேதி அந்த மனிதர் இந்த மண்ணில் மனுவான நாள் என்பதால்தான் இந்தக் கேள்வி அந்நாட்டினரிடம் கேட்கப்பட்டது என்றும் புரிந்தது. நம் எல்லாருக்கும் தெரியும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமூக உரிமைக்காகப் போராடிய மாபெரும் ஆப்ரிக்க-அமெரிக்கத் தலைவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்று. “எனக்கு ஒரு கனவு இருக்கின்றது” என்ற அவரின் அன்றையக் கனவு, இன்று அமெரிக்காவில் எல்லா மட்டங்களிலும் முழுமையாக நனவாகவில்லையெனினும், ஓரளவு நிறைவேறியிருக்கிறது என்று ஒரு வல்லுனர் இக்கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறார். மகாத்மா காந்தியின் அகிம்சா வழியைப் பின்பற்றி, சம உரிமைக்காகக் குரல் கொடுத்த இவருக்கு, 1964 ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கி அவரது சேவையைப் பாராட்டியது நொபெல் விருதுக் குழு. இனப்பாகுபாடு ஒழிவதற்கும், ஏழைகளின் வாழ்வு ஏற்றம் பெறவும், பொருளாதார நீதிக்கும் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங், இளவயதில் இவ்விருதைப் பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றார். ஆனால் அவரின் சமத்துவத்துக்கான கொள்கைகளை ஏற்க மனமில்லாத ஒருவர், அவரைத் துப்பாக்கித் தோட்டாக்களுக்குள் அடக்கி விட்டார். 1968ம் ஆண்டு ஏப்ரல் 4 ம் நாள் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது. அப்போது மார்ட்டின் லூத்தர் கிங்கின் வயது 39தான். ஆனால் இவர் விதைத்த சமத்துவச் சமுதாய விதைகள், இன்றும் உலகின் பல பாகங்களில் பலனளித்துக் கொண்டிருக்கின்றன. “மாற்றத்துக்கு....” என்று இவரின் நினைவிடத்தில் பொறிக்கலாமா? என்றுகூட ஒரு கேள்வி இஞ்ஞாயிறன்று எழுந்தது.
“சமத்துவ, சமதர்ம சமுதாயம் சமைக்கப் புறப்படுங்கள்” என்ற முழக்கத்துடன், வரலாற்றில் பல எழுச்சிகளும் கிளர்ச்சிகளும் நடந்துள்ளன. சட்டத்தின்முன் அனைவரும் சமம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஒரே இறைவனின் பிள்ளைகள் என்று, சம உரிமைக்கானப் போராட்டங்கள் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆயினும் மக்களைக் கேளிக்கைப் பொருட்களாகவும் காட்சிப் பொருள்களாகவும் நடத்தும் மனிதமாக்கள் இந்த 21ம் நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையளிக்கிறது. அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழும் ஜாரவா பழங்குடிப் பெண்கள் சிலர் பற்றிக் கடந்த வாரத்தில் வெளியான செய்தி நம்மையெல்லாம் தலைகுனிய வைத்தது. அந்தமான் நிகோபார் தீவுகளில் ஆங்கிலேயர் குடியேறத் தொடங்கியபோது, அந்தத் தீவில் இருந்த பழங்குடி மக்கள் பல விதங்களில் அழிக்கப்பட்டனர். அவ்வாறு அழிந்ததுபோக, எஞ்சியுள்ள பழங்குடியினர், அத்தீவின் அடர்ந்த காடுகளில், ஆடை அணியாமல் இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். தற்போது இவர்கள் 400 பேர் என்றளவில்தான் உள்ளனர். அந்தப் பகுதி வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், உணவுப் பொட்டலங்கள், சுவையான பிஸ்கட்டுகள் கொடுத்தால், அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதும், அவர்கள் சொன்னபடி ஆடுவதும் ஜாரவா பழங்குடிகளைப் பொறுத்தவரை தவறான செயலோ அல்லது வெட்கப்படும் விடயமோ அல்ல. இந்தப் பழங்குடிப் பெண்களில் சிலர், சுற்றுலாப் பயணிகள் கொடுத்த உணவுக்காக அரை நிர்வாணமாக நடனம் ஆடிய ஒளிக் காட்சி, The Observer இணையதளத்தில் அண்மையில் வெளியாகியது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இலட்சக்கணக்கான மக்கள் இதைப் பார்த்துள்ளனர். அந்தமானுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டினரை மகிழ்விப்பதற்காக, உள்ளூர் காவல்துறையினர் பணம் பெற்றுக் கொண்டு இந்தப் பழங்குடிப் பெண்களை நடனமாடச் செய்வதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
படிப்பறிவற்ற இந்த அப்பாவிப் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை வாசித்த போது, சே... இப்படியும் மனிதர்களா? என்று வெட்கப்பட வைத்தது. இந்தச் செயல், “ஒரு தேசியத் தலைக்குனிவு” என்றும், “நர மாமிசம் சாப்பிட்டு உயிர்வாழும் பழங்குடிகள் இன்றில்லை. ஆனால், பழங்குடிகளைக் காட்சிப் பொருளாக்கி உயிர்வாழும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்நிகழ்வு காட்டுகிறது” என்றும் ஒரு தமிழ்த் தினத்தாள் கண்டனம் தெரிவித்திருந்தது. வறிய மக்களின் பசிக்குத் தீனி போட்டு அதில் தனது இன்பப் பசியைத் தீர்க்கத் துணிகின்றது காசுக்கார உலகம். இந்தப் பழங்குடி மக்கள், 1990-ம் ஆண்டுகளில்தான் நாகரிக மனிதர்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களும் மனிதர்கள்தானே. இவர்களும் இறைவனின் பிள்ளைகள்தானே. மனித மாண்புடனும் மதிப்புடனும் வாழ இவர்களுக்கும் உரிமை இருக்கிறதுதானே. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யானை, புலிகளைக் காட்டுவதற்கான வனச்சவாரி போல, மானுடசாதியைக் காட்டும் வனச்சவாரிக்கு காட்சிப்பொருளாக இவர்கள் இன்னமும் இருப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?
கடந்த வாரத்தில் உரோம் நகரில் ஒரு குடியேற்றதாரச் சீனக் குடும்பம் தாக்கப்பட்டது. அக்குடும்பத்தின் கடையில் பணம் திருடச் சென்ற இரண்டு பேர், அந்தக் குடும்பத்துத் தாயைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திவிட்டு துப்பாக்கியால் சுட்டதில் 31 வயது தந்தையும் அவர்களது 9 மாத மகளும் இறந்துவிட்டனர். இத்தாலியத் தலைநகரான உரோமையில் மட்டும் ஏறக்குறைய ஐம்பதாயிரம் சீனர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் மெழுகுதிரிகளையும் மலர்களையும் ஏந்திக் கொண்டு பேரணி ஒன்றை நடத்தினர். அச்சமயம், “வன்முறை வேண்டாம், எங்களுக்கு அதிகப் பாதுகாப்பு வேண்டும்” என்று எழுதப்பட்ட பெரிய அட்டைகளையும் கொண்டு சென்றனர். “வன்முறை இல்லாத இடமே அமைதியை அனுபவிக்கும்” என்றும் இந்த ஊர்வலத்தில் ஒருவர் சொன்னார்.
2011ம் ஆண்டின் இறுதி வெள்ளிக்கிழமையன்று பிரிட்டனில் 23 வயது நிரம்பிய பித்வே என்ற இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டார். இவர், மேல்படிப்புக்காக பிரிட்டன் சென்றவர். ஆஸ்திரேலியாவிலும் இந்தியர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று உலகில் சுமார் 21 கோடியே 40 இலட்சம் குடியேற்றதாரர் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது. சனவரி 15, இஞ்ஞாயிறன்று கத்தோலிக்கத் திருஅவை, அனைத்துலக குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்ந்தோர் தினத்தைக் கடைப்பிடித்தது. நாடுகளில் குடியேற்றதாரர்களுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா?, இவர்கள் மாண்புடனும் மதிப்புடனும் வாழ முடிகின்றதா?,... இப்படிக் கேள்விகள் வந்து கொண்டே இருந்தன. இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், இத்தினத்தைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான குடியேற்றதாரர்கள், “எண்ணிக்கையில்” இல்லை, ஆனால் இவர்கள் அமைதியில் வாழ விரும்பும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளையோர் மற்றும் முதியோர் என்று கூறினார்.
RealAudioMP3 அன்பு நெஞ்சங்களே, கறுப்பர்களோ, பழங்குடி இனத்தவரோ, குடியேற்றதாரரோ, யாராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதரும் சம உரிமையுடன் வாழவும், மனித மாண்புடன் நடத்தப்படவும் விரும்புகின்றனர். அது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமையும்கூட. ஆனால், தாங்கள் அநீதியாய் நடத்தப்படும் போது முறுக்கிக்கொண்டு நின்றால் வாழ முடியாது என்பதுதான் குடியேற்றதாரரின் எதார்த்தமான நிலை. அதனால் அவர்கள், தேவையான இடங்களில் தேவையான நேரங்களில் வளைந்து கொடுத்துத்தான் செல்கின்றனர். வளைந்து கொடுத்தால்தான் கொஞ்சம் உறவுடன் வாழ முடியும். அதேசமயம் வாழவேண்டுமென்பதற்காக ஓரேயடியாகக் குழைந்தால் அது ஆபத்தாக முடியும். எப்போதும் வளைந்தே இருந்தால் நிமிர முடியாத நிலை ஏற்படும்தானே!.
இணையத்தில் ஓர் அழகான காணொளிப் படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு நாய் மீது ஒரு பூனை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. அந்த நாயும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. இந்த விலங்குகளில் இருக்கும் பாசமும் நேசமும் மனிதர்களிடத்தில் குறைபடுகின்றதே என்று எண்ணத் தோன்றியது.
அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் புண்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது ஓர் இளம் வீரர் மரணப்படுக்கையில் கிடப்பதைக் கண்டார். அவரருகில் சென்று, உனக்காக நான் செய்ய வேண்டியது ஏதாவது உண்டா? என அன்பு கலந்த குரலில் கேட்டார். அதற்கு அவ்வீரன், “தயவு செய்து எனது அம்மாவுக்குக் கடிதம் எழுதுங்கள்” என்றான். அப்போது அவன் ஆபிரகாம் லிங்கனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர் அவனருகில் அமர்ந்து, அவன் சொல்லச் சொல்ல எழுதினார். “பேரன்புமிக்க அம்மா, நான் படுகாயமடைந்துள்ளேன். நான் உயிர் பிழைப்பது சந்தேகம்தான். எனக்காக வருத்தப்பட வேண்டாம். உங்களையும், மேரி, ஜான் மற்றும் அப்பாவையும், இறைவன் ஆசீர்வதிப்பாராக” என்றார். இளம்வீரருக்கு அதற்கு மேல் தொடர முடியவில்லை. ஆகவே, அவர் சார்பாக லிங்கனே கையெழுத்துப் போட்டார். பின்குறிப்பில், “உங்கள் மகனுக்காக எழுதியது ஆபிரகாம் லிங்கன்” என்று குறிப்பிட்டிருந்தார். பின்குறிப்பைப் பார்த்த அவ்வீரர், இவ்வளவு பெரிய அன்பு காட்டியவர் யார் என அடையாளம் கண்டு வியப்படைந்தார். நீங்கள் உண்மையிலேயே அரசுத்தலைவரா? என்று கேட்டார். ஆம் என அவர் அமைதியாகச் சொன்னார். அவ்வீரர் அவரிடம், தயவுசெய்து எனது கையைப் பிடிப்பீர்களா?. நான் எனது இறுதி மூச்சை விடுவதற்கு இது பேருதவியாக இருக்கும் என்றார். அவரும் அவர் கையைப் பிடித்துக் கொண்டே இதமான வார்த்தைகளால் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
ஆம். செயற்கரிய செயல்களை நாம் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் மனித மாண்பையும் மதிப்பையும் இழந்து, கரடு முரடான பாதையில் செல்வோரின் சுமையை, நமது சிறு அன்புச் செயல்கள் மூலம் குறைக்கலாம். நமது சிறு சிறு செயல்களும் அவர்களுக்குப் பயனாக இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.