2012-01-16 15:08:54

தென் கொரியாவின் மறைமாவட்டங்களில் அணு எதிர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன


சன.16,2012. ஆயர்களின் ஆதரவோடு தென் கொரியாவின் மறைமாவட்டங்களில் அணு எதிர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இத்திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவின் முயற்சியால், Andong, Busan, Daegu, Wonju ஆகிய நான்கு மறைமாவட்டங்களில் அணு உலைகளுக்கு எதிரான கிழக்குக் கடற்கரை உறுதுணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தென் கொரியாவில் Samcheok மற்றும் Yeongdeok ஆகிய இரு நகரங்களில் புதிய அணு உலைகளை அரசு கட்டாமல் இருப்பதற்கு இக்குழு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளும் என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Vincentius Kim Jun-han கூறினார்.
தென் கொரியாவில் இயங்கி வரும் அணு உலைகளின் தற்போதைய நிலை, முக்கியமாக அவைகளில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய ஓர் அறிக்கையை மக்களுக்கு அளிக்குமாறு அரசை வலியுறுத்துவதும் இந்த அமைப்பின் ஒரு முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் தற்போது 21 அணு உலைகள் இயங்கி வருகின்றன. மேலும் 11 புதிய அணு உலைகளைக் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.