2012-01-16 15:09:21

ஐரோப்பாவில் எயிட்ஸ் நோயாளிகளிடையே பணீயாற்ற கிறிஸ்தவ சபைகளுக்கு அரசுகள் அழைப்பு


சன.16,2012. ஹெச்.ஐ.வி. நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டோர் மற்றும் எயிட்ஸ் நோயாளிகளிடையே தங்கள் பணிகளை அதிகரித்து அவர்களின் துன்பம் போக்க உதவுமாறு ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்தவ சபைகளுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது ஐரோப்பிய ஐக்கிய அவை.
ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் எயிட்ஸ் நோயாளிகளிடையே தங்கள் பணிகளைச் சிறப்புற ஆற்றி வரும் கிறிஸ்தவ சபைகள், இரஷ்யாவிலும் உக்ரைனிலும் இத்தகையப் பணிகளை அதிகரிக்கவேண்டும் என விண்ணப்பிக்கிறது ஐரோப்பிய ஐக்கிய அவை.
ஏற்கனவே இரஷ்ய கிறிஸ்தவ சபைகளின் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளதும், எயிட்ஸ் நோயாளிகளிடையே கிறிஸ்தவ சபைகள் தங்கள் பணிகளை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2001 முதல் 2010 வரை ஹெச்.ஐ.வி. நோய்க்கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 90 விழுக்காட்டினர் இரஷ்யா மற்றும் உக்ரைனைச் சார்ந்தவர்கள் என்கிறது WHO எனும் உலக நல அமைப்பு.
2010ம் ஆண்டில் 3 கோடியே 40 இலட்சம் மக்கள் இந்நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த 30 ஆண்டுகளில் 2 கோடியே 50 இலட்சம் பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளதாகவும் ஐ.நா. அமைப்பு தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.