2012-01-16 15:10:01

அரசின் கண்ணோட்டத்தில் அனைத்து பாகிஸ்தான் மக்களும் சமமாகக் கருதப்பட வேண்டும் - பாகிஸ்தான் ஆயர்


சன.16,2012. சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு செயல்படக்கூடாது என்றும், அரசின் கண்ணோட்டத்தில் அனைத்து பாகிஸ்தான் மக்களும் சமமாகக் கருதப்படவேண்டும் என்றும் பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
இவ்வாண்டின் முதல் நாள் கொண்டாடப்பட்ட அகிலஉலக அமைதி நாளுக்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிட்ட அமைதிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு பைசலாபாத் மறைமாவட்டம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் அம்மறைமாவட்டத்தின் ஆயர் ஜோசப் கூட்ஸ் இவ்வாறு பேசினார்.
பாகிஸ்தான் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் அலி ஜின்னா மதத்தையும் அரசையும் பிரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் கூட்ஸ், நாட்டில் உள்ள பல்வேறு மதங்கள், இனங்கள் ஆகியவை நமது பன்முகக் கலாச்சாரத்தை உலகறியச் செய்யும் ஒரு வழியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உலக அமைதிச் செய்தியில் இளையோர் மீது தனி அக்கறையைத் திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதைக் கூறிய பைசலாபாத் குருகுல முதல்வர் அருள்தந்தை Khalid Rasheed Asi, இளையோரை மத நல்லிணக்கத்திலும், சமுதாய நீதியிலும் வளர்ப்பது அரசின் தலையாயக் கடமை என்று வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.