2012-01-14 13:40:38

ஞாயிறு சிந்தனை


இன்று தமிழகத்திலும், உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர் சமுதாயங்களிலும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எனக்குத் தெரிந்து எல்லா நாடுகளிலும் ஆண்டின் பல்வேறு நாட்களில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அறுத்துக் கட்டிய நெற்கதிர்கள், கரும்புக் கட்டுகள், பொங்கி வரும் பானை, மஞ்சள், கோலங்கள், புத்தாடைகள் என்று இந்த நாளை அழகு செய்யும் பல அடையாளங்கள் உள்ளன. உறவுகள் சேர்ந்து வருதல், விருந்தோம்பல், ஆடல், பாடல், விளையாட்டுக்கள் என்று இவ்விழாவுக்கு மெருகூட்டும் பல செயல்பாடுகள் உள்ளன. இயற்கை வளமும், மனித உழைப்பும் இணைந்து இறைவனின் கருணையால் நமக்குக் கிடைத்த கொடைகளுக்கு நன்றி சொல்லும் அழகானத் திருநாள் இது. இவ்வாறு பல உயர்வான எண்ணங்களால் நம் மனங்களை நாம் நிரப்ப முயன்றாலும், இந்த அறுவடைத் திருநாள் சில நெருடல்களையும் உருவாக்கத் தவறவில்லை.

பொங்கிவரும் மகிழ்வில் நீர் தெளித்து அடக்கிவிடும் இந்த நெருடல்களையும் உள்வாங்கி, நம் மனங்களில் நன்றி உணர்வும், பகிரும் உணர்வும் பொங்குவதற்கு இப்பொங்கல் திருநாளன்று இறைவன் நமக்குத் துணை செய்யவேண்டும்.

இனி, இன்றைய ஞாயிறு வாசகங்களின் மீது ஒரு பார்வை....
இறைவன் எனக்கு எப்போது அறிமுகமானார்? மிகவும் கடினமான ஒரு கேள்வி இது. நான் பிறந்து வளர்ந்தது ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில். கல்வி பயின்றது கத்தோலிக்கப் பள்ளிகளில், கல்லூரிகளில்... பதினெட்டு வயதில் துறவறப் பயிற்சியில் இணைந்தேன். இப்படி, நான் வளர்ந்ததெல்லாம் கத்தோலிக்கச் சூழ்நிலைதான் என்றாலும், இறைவன் எப்போது எனக்கு அறிமுகமானார் அல்லது அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுக் கேட்டால், பதில் சொல்வது கடினம்.
என் தாய், தந்தை இருவரும் முதன்முதலில் கடவுள், இறைவன், ஆண்டவன் என்ற வார்த்தைகளை எனக்கு சொல்லித் தந்திருப்பார்கள். இது நிச்சயம். என் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்திருப்பார்கள். என் பிஞ்சு விரல்களை எடுத்து, என் நெற்றியில் நானே சிலுவை அடையாளம் எப்படி வரைவது என்று சொல்லித் தந்திருப்பார்கள். இவைகளெல்லாம் இறைவனை எனக்கு அறிமுகம் செய்து வைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள். குழந்தைப்பருவப் பள்ளியில் ஆரம்பித்து, ஒவ்வோர் ஆண்டும் மறைகல்வி மூலம் அருள்சகோதரிகள், குருக்கள், ஆசிரியர்கள் என்று பலரும் கதைகள் வடிவில் இறைவனை அறிமுகம் செய்திருப்பார்கள். இவையெல்லாம் என் வாழ்வில் நடந்தன என்பதை அறிவேன். ஆனால், எந்த ஒரு நாளில், நேரத்தில் இறைவன் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் என்று தீர்மானமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
நான் துறவறப் பயிற்சியில் நுழைந்தபின்னர் இறைவன் இன்னும் சிறிது ஆழமாக எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். எனக்கு 20 அல்லது 22 வயதானபோது, வாழ்வில் சில ஆழமான, துயரமான பிரச்சனைகளைச் சந்தித்தேன். அப்போது, கடவுளைப் பற்றிய கேள்விகள் மனதில் எழுந்தன. அந்தக் கேள்விகளுக்குப் பதில் தருவதைப் போல் ஆன்மீகக் குருக்கள் இறைவனை மீண்டும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
குழந்தைப் பருவத்தில் எனக்கு அறிமுகமான இறைவன், இன்றும் பல வழிகளில் எனக்கு அறிமுகமாகி வருகிறார். கடவுள் நம் வாழ்வின் இறுதிவரை நமக்கு அறிமுகம் ஆகிக் கொண்டே இருப்பார். இவர்தான் இறைவன் என்று நாம் எல்லைகளை வரையும் ஒவ்வொரு நேரமும், அந்த எல்லைகளை உடைத்து, மாறுபட்டதொரு வழியில் நமக்கு மீண்டும் இறைவன் அறிமுகமாவார். எல்லைகளற்ற இறைவனின் அழகு இது.

வாழ்வின் பல நிலைகளில், பலச் சூழல்களில் இறைவன் அறிமுகம் ஆகிறார் என்பதை இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. சிறுவன் சாமுவேலுக்கு இறைவன் அறிமுகமான நிகழ்வை சாமுவேல் முதல் நூல் மூன்றாம் பிரிவு எடுத்துரைக்கிறது. வளர்ந்துவிட்ட நிலையில் அந்திரேயா, மற்றும் பேதுரு இருவருக்கும் இயேசு அறிமுகமாகும் நிகழ்வை இன்றைய நற்செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த இரு நிகழ்வுகளுமே சில பழைய பாடங்களையும், சில புதிய பாடங்களையும் நமக்குச் சொல்லித் தருகின்றன.
சிறுவன் சாமுவேலுக்கு ஆண்டவன் இல்லத்தில் இறைவன் அறிமுகமாகிறார். சாமுவேலைப் பொறுத்தவரை ஆண்டவனின் இல்லமே அவன் வாழ்வாக மாறிவிட்டது. இருந்தாலும், அந்தப் புனிதமான இடத்திலும் அச்சிறுவனால் இறைவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
சின்ன மீன் ஒன்று கடலில் நீந்திக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் நீந்தி எதையோ தேடுவதைப் போல் இருந்தது. இதைப் பார்த்த ஒரு பெரிய மீன் அதனிடம், "என்ன தேடுகிறாய்?" என்று கேட்க, சின்ன மீன், "கடல், கடல் என்று நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்களே, அது எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறேன்." என்று சொன்னதாம். கடலுக்குள் இருந்துகொண்டே கடலைத் தேடிய சின்ன மீனைப் போல, கடவுளின் இல்லத்தில் இருந்துகொண்டே கடவுளை அறியாமல் வாழ்ந்தான் சிறுவன் சாமுவேல். அவன் சிறுவன், எனவே, அவனது அறியாமையை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆனால், நம் வாழ்வைத் திருப்பிப் பார்க்கும்போது, பல நேரங்களில் காற்றைப் போல, கடலைப் போல இறைவன் நம்மைச் சூழ்ந்திருந்தாலும் அவரைப் புரிந்துகொள்ளாமல் இருந்ததை இப்போது எண்ணிப் பார்க்கலாம். முக்கியமாக, நம் துன்ப நேரங்களில் இறைவன் காணாமற் போய்விட்டதாக எண்ணியிருக்கிறோம்.
துன்பங்கள் பேரலைகளாய் எழுந்த நேரத்தில் நம் வாழ்வென்ற கடற்கரை மணலில் ஒரே ஒரு சோடி காலடித் தடங்கள் பதிந்திருந்ததைப் பார்த்துவிட்டு, இறைவன் அந்த நேரத்தில் நம்மைச் சுமந்து நடந்ததால் அங்கு ஒரே ஒரு சோடி காலடித் தடங்களே பதிந்தன என்பதையும் மறந்துவிட்டு, அவர் நம்மைத் தனியே தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டார் என்று தப்புக் கணக்கு போட்ட நேரங்களை நாம் இப்போது எண்ணி பார்க்கலாம். சிறுவயதில் நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இறைவனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவருடன் அதிகமான நேரத்தைச் செலவு செய்யாமல் போனதால் இத்தவறுகள் நடந்தன. இத்தவறுகளைத் தீர்க்கும் வழிகளை இன்றைய நற்செய்தி சொல்லித் தருகிறது.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசுவைத் தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. சாமுவேலுக்கு இறைவன் கோவிலில் அறிமுகமாகிறார். இங்கோ, வழியோரம் இந்த அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை உணரலாம்.

வழியோரம் அறிமுகமான இயேசுவை வழியோரமாகவே விட்டுவிட்டு அந்தச் சீடர்கள் தங்கள் வழியில் செல்லவில்லை. அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். இந்நிகழ்வைக் கூறும் யோவான் நற்செய்தியின் வரிகளைக் கேட்போம்:
யோவான் நற்செய்தி 1: 38-39
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
"என்ன தேடுகிறீர்கள்?" "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்ற இரு கேள்விகளையும், "வந்து பாருங்கள்" என்ற அழைப்பையும் சுற்றி இன்றைய நற்செய்தி பின்னப்பட்டுள்ளது. இறைவனை, இயேசுவை உலகிற்கு அறிமுகம் செய்துவைக்க விரும்பும் சீடர்களுக்குத் தேவையான இரு அம்சங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. இறைவனைத் தேடுவதும், இறைவனுடன் தங்குவதும் சீடர்களுக்கு மிகவும் தேவையான அம்சங்கள்.

இன்றைய நற்செய்தியை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். பல கோணங்களில் சிந்தித்து, என் எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறேன். இம்முறை நான் இந்த நற்செய்தியை வாசித்தபோது, அதில் இருந்த ஒரு பகுதி என்னை ஆழமாகப் பாதித்தது. இது அந்திரேயாவைப் பற்றிய பகுதி. இதுவரை நான் எண்ணிப்பார்க்காத பகுதி. அந்திரேயா முதலில் இயேசுவைச் சந்திக்கிறார். பின்னர், தான் பெற்ற இன்பம் தன் சகோதரனும் பெற வேண்டும் என்று பேதுருவை இயேசுவிடம் அழைத்து வருகிறார். நம் குடும்பங்களில் உடன்பிறந்தோரும், உறவுகளும் வாழ்வில் முன்னேறுவதற்கு உதவியாக பலரை நாம் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம். இந்த அறிமுகங்களில் எல்லாம் மிக முக்கியமான அறிமுகம் அவர்களை இறைவனுக்கு அறிமுகம் செய்துவைப்பது. ஆனால், இந்த அறிமுகம் நம் குடும்பங்களில் நடைபெறுகிறதா? நாம் வாழும் இன்றைய அவசர உலகில் குடும்பங்களில் இறைவனை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்புக்கள் உள்ளனவா? அல்லது, இறைவனை நாம் கோவில்களில் பூட்டிவிட்டு அவ்வப்போதுமட்டும் நம் உறவுகளுக்குத் திறந்து காட்டுகிறோமா? இவ்வாறு இறைவனைக் கோவில்களில் மட்டும் பூட்டிவைப்பதால், இந்த இறைவன் நம் தலைமுறைக்கு அந்நியமாகிப் போய்விட்டாரோ? என்ற கேள்விகளை நாம் ஆழமாக ஆராய வேண்டும்.

அந்திரேயா தன் உடன் பிறந்த பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார். பேதுருவும் இயேசுவும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனதால், காலத்தால் அழியாத ஒரு வரலாறு உருவானது. பேதுருவைக் கண்டதும் இயேசுவின் முழு கவனமும் அவர்மீது திரும்பியது. அவரை 'கேபா' 'பாறை' உறுதியானவர் என்றெல்லாம் புகழ்கிறார் இயேசு. தான் அழைத்து வந்த சகோதரன் மீது இயேசு தனி கவனம் காட்டியது அந்திரேயாவுக்கு வருத்தத்தையோ, பொறாமையையோ உருவாக்கவில்லை. காரணம், அவர் திருமுழுக்கு யோவானின் சீடர். யோவான் இயேசுவை அறிமுகம் செய்தார். மறைந்துபோனார். ‘அவர் வளரவேண்டும், தான் மறைய வேண்டும்’ என்று அடிக்கடி சொல்லி வந்தவர் அவர். திருமுழுக்கு யோவானிடம் சீடராக இருந்த அந்திரேயாவும் அதே மன நிலையில் இருந்தார். தான் மறைந்தாலும் சரி, தன் சகோதரன் பேதுரு வரலாறு படைக்க வேண்டும் என்று எண்ணினார். இயேசுவும், பேதுருவும் படைத்த அந்த வரலாறு 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது.உடன் பிறந்தோரிடையில் இப்படி உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால் உலகத்தை மாற்றும் வரலாறுகள் தொடரும். உடன்பிறந்தோரும், உறவுகளும் கூடிவரும் இந்தப் பொங்கல் திருநாளில் நாம் ஒருவரை ஒருவர் இறைவனுக்கு அறிமுகம் செய்வதற்கு இறைவன் நமக்கு வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடுவோம். உடன்பிறந்தோரும், உறவுகளும், ஏன் இந்த உலகம் முழுவதுமே உன்னதமான வரலாறு படைக்க வேண்டும் என்றும் இந்தப் பொங்கல் திருநாளில் மன்றாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.