2012-01-13 15:46:31

திருப்பீடத்தின் இருப்பு, இத்தாலிக்கும் உரோம் நகருக்கும் பெருமை தருகிறது - திருத்தந்தை


சன.13,2012. திருப்பீடத்தின் இருப்பு, இத்தாலிக்கும் உரோம் நகருக்கும் பெருமைதரக்கூடியதாகவும், வளம் சேர்ப்பதாகவும் இருக்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.
வத்திக்கான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், வத்திக்கானின் நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்ட போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
பொதுவான பாதுகாப்புப் பணி செய்வது, குறிப்பாக, உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், திருப்பயணிகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பது என்பது எளிதான வேலை அல்ல என்றுரைத்த அவர், இப்பணியானது ஒவ்வொரு நாளும் செய்கின்ற நேர்த்தியான மற்றும் திறமைவாய்ந்த பணி என்று கூறினார்.
புனித பேதுரு பசிலிக்காவைத் தரிசிக்க வரும் பெருமளவானத் திருப்பயணிகளைப் பார்க்கும் போது, இப்பணியாளர்களுடைய விசுவாசமும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
நீதியிலும் அமைதியிலும் இளையோரைப் பயிற்றுவித்தல் என்ற தலைப்பில் இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக அமைதி தினம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, நீதி, அமைதி ஆகியவற்றிற்கு விளக்கமும் அளித்தார்.
நீதிக்கும் அமைதிக்கும் மேலான விதத்தில் உறுதியளிக்கும் இறைவனின் பெயரால், எந்தவிதமான வன்முறைச் செயலும் நிகழாத ஆண்டாக, இந்த 2012ம் ஆண்டு அமைய அன்னைமரியா உதவுவாராக என்றும் இச்சந்திப்பின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.