2012-01-12 15:01:29

கியூபா நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுக்கு மியாமி உயர்மறைமாவட்டம் ஏற்பாடு செய்துள்ள திருப்பயணம்


சன.12,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற மார்ச் மாதம் கியூபா நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ளும் வேளையில், அமெரிக்காவில் வாழும் கியூபா நாட்டுக் கத்தோலிக்கர்கள் நூற்றுக்கணக்கில் அங்கு திருப்பயணமாகச் செல்வார்கள் என்று தான் நம்புவதாக மியாமி பேராயர் Thomas Wenski கூறினார்.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் வாழும் கியூபா நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுக்கு மியாமி உயர்மறைமாவட்டம் திருப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய பேராயர் Wenski, திருத்தந்தையின் திருப்பயணம் கியூபாவுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையே இன்னும் வலுவான ஒப்புரவை உருவாக்கும் என தான் நம்புவதாகக் கூறினார்.
கியூபாவின் பாதுகாவலராக விளங்கும் பிறரன்புக் கன்னியின் திரு உருவம் கண்டுபிடிக்கப்பட்டு நானூறு ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி திருத்தந்தை அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் திருப்பயணம் அமைகிறது என்று கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன..
கியூபா நாட்டின் புரட்சியின்போது, அந்நாட்டிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் குடியேறிய பலர், அந்நாட்டிற்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாமல் இருந்தனர். 2009ம் ஆண்டு முதல் இவ்விரு நாடுகளுக்கும் இடையே பயணங்கள் மேற்கொள்ளும் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் வாழ்வோர் தங்கள் உறவினர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.