2012-01-11 15:23:15

மனம் திறந்த உரையாடல்களில் ஈடுபடவில்லையெனில் நைஜீரியாவில் இன்னும் பல மரணங்கள் நிகழும்


சன.11,2012. நைஜீரியாவில் வாழும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் மனம் திறந்த உரையாடல்களில் ஈடுபடவில்லையெனில் அந்நாட்டில் இன்னும் பல மரணங்கள் நிகழும் என்று Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் தலைவர் கூறினார்.
கடந்த கிறிஸ்மஸ் நாளன்று நைஜீரியாவில் ஆரம்பமான வன்முறைத் தாக்குதல்கள் தற்போதும் தொடர்வதாகவும், இச்செவ்வாயன்று முடிந்த 24 மணி நேர வன்முறைகளில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ICN கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கிறிஸ்தவர்கள் நைஜீரியாவின் வட பகுதியை விட்டு நீங்க வேண்டும் என்று போகோ ஹாராம் என்ற அடிப்படைவாதக் குழுவினர் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்த அடிப்படைவாதக் குழுவினரை கட்டுப்படுத்த அரசு, காவல்துறை மற்றும் இராணுவம் ஆகிய அதிகார அமைப்புக்கள் சரியான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளவில்லையெனில் அந்நாட்டில் மரணங்கள் இன்னும் அதிகமாகும் என்று Aid to the Church in Need இயக்குனர் Neville Kyrke-Smith கூறினார்.
கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் இயக்குனர் Kyrke-Smith எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.