2012-01-11 15:22:03

புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளை ஊடகங்கள் மதிக்க வேண்டும் - பேராயர் வேலியோ


சன.11,2012. மனித குடும்பத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் குடியேற்றம், புலம்பெயர்தல் ஆகிய செயல்பாடுகள் புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாள் சனவரி 15, வருகிற ஞாயிறன்று கொண்டாடப்படுவதையொட்டி, குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவரும், அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ளவருமான பேராயர் Antonio Maria Veglio, இவ்வுலக நாளைக் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
குடியேற்றம், புலம் பெயர்தல் ஆகியவற்றால் பல்வேறு சமுதாய, கலாச்சார, மற்றும் மத பண்புகளின் சங்கமம் நிகழ்கிறது என்று கூறிய பேராயர் வேலியோ, இந்தச் சங்கமத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளும் உரையாடல்களும் இடம்பெறுகின்றன என்று எடுத்துரைத்தார்.
இந்த உலக நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியில் நாடு விட்டு நாடு செல்லும் மக்களுக்கு செய்யப்படும் மேய்ப்புப் பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளதை பேராயர் சுட்டிக் காட்டினார்.
ஊடகங்கள் புலம்பெயரும் மக்களை தவறான வழிகளில் சித்தரிப்பதை சரிசெய்யவேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் விடுத்துள்ள அழைப்பையும் நினைவுறுத்தி, புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளை ஊடகங்கள் மதிக்க வேண்டும் என்றும் பேராயர் வேலியோ வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.