2012-01-11 15:22:27

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் கிறிஸ்துவின் உருவம் தாங்கிய ஒரு ஊர்வலத்தில் 85 இலட்சம் மக்கள்


சன.11,2012. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களால், விசுவாசிகள், தயக்கத்திற்குப் பதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று பிலிப்பின்ஸ் தலத்திருஅவையின் ஆயர் ஒருவர் கூறினார்.
இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் கிறிஸ்துவின் உருவம் தாங்கிய ஓர் ஊர்வலத்தில் 85 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்திங்களன்று கலந்துகொண்டனர் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய மணிலா பேராயர் Antonio Tagle இவ்வாறு கூறினார்.
கறுப்பு நாசரேத்தூர் மனிதர் (Black Nazarene) என்று புகழ்பெற்ற கிறிஸ்துவின் உருவம் பல அற்புத சக்திகள் கொண்டது என்று நம்பி வரும் பிலிப்பின்ஸ் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் மணிலா நகரில் இவ்வூர்வலத்தை நடத்தி வருகின்றனர்.
கருமை நிறத்தில் உள்ள கிறிஸ்து சிலுவை சுமந்து செல்வதுபோல் அமைந்துள்ள இந்த திரு உருவத்தைத் தொடும் அனைவருக்கும் புதுமைகள் நடக்கும் என்று பிலிப்பின்ஸ் மக்கள் நம்பி வருகின்றனர்.
அல்கெய்தாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாய் கருதப்படும் Moro Islamic Liberation Front (MILF) என்ற அடிப்படைவாதக் குழு ஒன்று இவ்வாண்டு நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தலாம் என்று கூறப்பட்டாலும், இவ்வாண்டு ஊர்வலத்தில் வழக்கத்திற்கும் அதிகமாக கூட்டம் நிறைந்திருந்தது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.