2012-01-11 15:23:31

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சரிசமமான கல்வியை வழங்க வேண்டியது நமது கடமை


சன.11,2012. தகவல் பரிமாற்றம் மற்றும், தொடர்புத்துறை தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உலகமனைத்திலும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சரிசமமான கல்வியை வழங்க வேண்டியது நமது கடமை என்று UNESCO தலைமை இயக்குனர் Irina Bokova கூறினார்.
ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனம் இச்செவ்வாய் முதல் வியாழன் வரை லண்டன் மாநகரில் நடத்தி வரும் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் உச்சி மாநாட்டின் துவக்க விழாவில் இச்செவ்வாய் உரையாற்றிய UNESCO இயக்குனர் இவ்வாறு கூறினார்.
'சிறந்தவைகளிலிருந்து கல்வி கற்று உலக மாற்றத்தை உருவாக்க' என்ற மையக் கருத்தில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், தற்போது உலகில் பயன்படுத்தப்படும் பல உயர்ந்த தொடர்பு முறைகளை கல்வித் துறையில் எவ்வாறு புகுத்துவது என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அடிப்படை கல்வியில் அனைத்துக் குழந்தைகளும் 2015ம் ஆண்டிற்குள் சேர்க்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் 2000மாம் ஆண்டிலிருந்து ஆரம்பமான முயற்சிகள் இன்னும் தகுந்த பலனைத் தரவில்லை என்று Irina Bokova சுட்டிக் காட்டினார்.
உலகில் தற்போது 79 கோடியே 30 இலட்சம் முதிர்ந்த வயதுடையோர் கல்வி அறிவின்றி உள்ளனர் என்று கூறும் ஐ.நா.வின் அறிக்கை, 1 கோடியே 90 இலட்சம் ஆசிரியர்கள் உலகெங்கும் நியமனம் செய்யப்பட்டால்தான் 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படை கல்வியைத் தர முடியும் என்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.