2012-01-11 15:22:57

அகில உலகின் 40க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் வட கொரிய அரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள திறந்த கடிதம்


சன.11,2012. பல ஆண்டுகளாய் மனித உரிமைகளை மறுத்து, வட கொரிய மக்களை வன்மையாய் அடக்கி ஆளும் அரசின் போக்கு மாறவேண்டும் என்று வட கொரிய அரசுத் தலைவருக்கு திறந்த கடிதம் ஒன்றை, அகில உலகின் 40க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் அனுப்பியுள்ளன.
தன்னுடைய தந்தை, தாத்தா ஆகியோரின் பிறந்தநாள்களை நினைவுகூரும் வண்ணம் வருகிற பிப்ரவரி முதல் தேதி பொது மன்னிப்பு வழங்கப்படும் நாளாக இருக்கும் என்று வட கொரிய அரசுத் தலைவர் Kim Jong-un விடுத்துள்ள ஓர் அறிக்கையை அடுத்து, உலக பிறரன்பு சேவை நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை இக்கடிதத்தில் வெளியிட்டுள்ளன.
FIDES செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த இக்கடிதத்தில், வட கொரிய மக்கள் இன்னும் உணவு பற்றாக்குறையால் அவதியுறும் நிலையைப் போக்க அந்நாட்டின் அரசு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வட கொரியாவின் சிறைகளில் 2 இலட்சத்திற்கும் 5 இலட்சத்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் மக்கள் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றும், கிறிஸ்தவர்கள் அந்நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என கருதப்படுவதால் கடுமையான துன்பங்களை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது என்றும் இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.