2012-01-10 15:26:37

மதுபானங்களைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிக்கு அயர்லாந்து ஆயர்கள் வரவேற்பு


சன.10,2012. அயர்லாந்து நாட்டில், மதுபானங்கள் விற்பனையில் விலையேற்றம் செய்ய எண்ணும் அரசின் முயற்சியை அயர்லாந்து ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.
மலிவாக, எளிதாக மதுபானங்கள் கிடைப்பதால், தனிமனித வாழ்விலும் குடும்பங்களிலும் பெருகி வரும் துன்பங்களையும், மதுபானம் அருந்துவதால் ஏற்படும் உடல் நலக்குறைவு, வேலைகளுக்குச் செல்லாமல் இருக்கும் நிலை ஆகிய சமுதாயப் பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி, அயர்லாந்து ஆயர்கள் அரசின் இப்புதிய முயற்சியை வரவேற்றுள்ளனர்.
அயர்லாந்தில் பெருகி வரும் மதுபான பயன்பாட்டினால் ஒவ்வோர் ஆண்டும் அரசுக்கு 370 கோடி யூரோ, அதாவது, ஏறத்தாழ 2220 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று ICN கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறுகிறது.
மதுபானங்களை பொறுப்புடன் பயன்படுத்துதலை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், பொறுப்பின்றி நடந்து கொள்பவர்களை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகள் தேவை என்றும் ஆயர் Éamonn Walsh கூறினார்.
மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எந்த ஒரு விளையாட்டையும், பொது விழாக்களையும் எடுத்து நடத்த அனுமதி மறுப்பது, மதுபான விளம்பரங்கள் தொலைக்காட்சி, வானொலி ஆகிய பொது ஊடகங்களில் இடம்பெறாமல் தடுப்பது, போன்ற பரிந்துரைகளை அயர்லாந்து ஆயர்கள் அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.