2012-01-09 15:31:25

வாரம் ஓர் அலசல் – நல்லதையே கேட்டு நல்லதையே பேசி...


சன.09,2012. அமெரிக்காவில் மலைப்பகுதி ஒன்றில் வயதான ஒரு மனிதர் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் குதிரைச் சவாரி செய்து வேட்டையாடி வந்தார். நல்ல குடும்பமும், போதுமான சொத்தும் இருந்தன. அதனால் மனநிறைவோடு இருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட இளைஞன் ஒருவன், அவரை நேரில் பார்த்து அவர் இளமைத் துடிப்புடன் வாழும் இரகசியத்தை அறிந்து கொள்ள விரும்பினான். ஒருநாள் அவரைப் போய்ப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான். “ஐயா, பெரியவரே, உங்களது வயது என்ன?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெரியவர், “என் வயது எனக்குத் தெரியாது. கடந்து போகும் என் வயதை எண்ணுவதில் நான் என் காலத்தைச் செலவிட விரும்பவில்லை. தோல்விகள், இழப்புகள் என, எதையும் கணக்குப் பார்ப்பதும் என் வழக்கமில்லை. ஆனால், என்னிடம் எத்தனை குதிரைகள் இருக்கின்றன?, எவ்வளவு பணம் இருக்கிறது?, எனது குடும்பத்தில் எவ்வளவு வசதி இருக்கின்றது?, எவ்வளவு ஆடைகள் இருக்கின்றன? போன்ற இவற்றை எண்ணிப் பார்த்து உற்சாகமாகச் செயல்படத்தான் எனக்குத் தெரியும் என்றார். பின்னர் அந்த இளைஞனிடம், “இப்போது அடுத்த கேள்வியைக் கேள்” என்றார் அந்தப் பெரியவர். முதல் கேள்விக்குக் கிடைத்த பதிலிலேயே இளைஞனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. அதனால் அந்தப் பெரியவரிடம் நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டான் அந்த இளைஞன்.
அன்பு நேயர்களே, வாழ்க்கையில் தோல்விகள், இழப்புகள் என எதையும் கணக்குப் பார்ப்பதில், காலத்தைக் கழிப்பதில் பயனில்லை. வெற்றிகள், வரவுகள் ஆகிய இவற்றைக் கணக்குப்பார்த்து வாழ்வதில்தான் வெற்றியின் இரகசியம் அடங்கியிருக்கிறது. கடந்த வார, நமது வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில், நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், நேர்மறைச் சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள் ஆகிய இவையே வாழ்வை வளமாக்கும், வாழ்க்கைக் கனவுகளை நனவாக்கும் என்று பார்த்தோம். வாழ்க்கையில் குறைகளைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் தோற்றுப் போகிறார்கள். மாறாக, கிடைத்ததைப் பற்றிக்கொண்டு மேலும் முயற்சி செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள் எனவும் கடந்த வாரம் கேட்டோம். நமது தினசரிகளையும் வார இதழ்களையும் வாசிக்கும் போது கொலைகளும், கொள்ளைகளும், ஏமாற்று வேலைகளும் புகார்களும் நிறைந்த செய்திகளே அதிகம் வெளியாகின்றன. எடுத்துக்காட்டுக்கு, இஞ்ஞாயிறன்று வெளியான சில உலக செய்திகளைப் பார்ப்போமே.
பிலிப்பீன்சில் சர்ச்சைக்குரிய Spratly தீவுக் கடல் பகுதியில் சீனக் கப்பல்கள் அத்துமீறி நுழைந்திருப்பதாகப் பிலிப்பீன்ஸ் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மியாமியில் வெனேசுவேலா நாட்டுத் தூதரக அதிகாரி Livia Acosta Noguera என்பவர் மீது பன்வலை அமைப்புத் தொடர்பானக் குற்றம் சாட்டப்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனக் கூறியுள்ளது அமெரிக்க அரசு.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் தற்போது இடம் பெற்று வரும் வன்முறைகள், அந்நாட்டில் 1960களில் இடம் பெற்ற உள்நாட்டுப் போரைவிட மோசமானதாக இருக்கின்றது என்று அரசுத்தலைவர் Goodluck Jonathan இஞ்ஞாயிறன்று கூறினார். நைஜீரியாவில் 1967முதல் 1970ம் ஆண்டு வரை இடம் பெற்ற சண்டையில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானுக்கு இராணுவ இரகசியங்களை விற்ற தூதரக அதிகாரி மாதுரி குப்தா மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1,275 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலக்கரி சுரங்க ஊழலில் சிக்கி, கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது சகாக்களும் இணைந்து அரசு நிலத்தைத் தனியாருக்கு விற்றதாக புகார் எழுந்துள்ளது.
இப்படி அரசியல், குடும்பம் என எல்லா இடங்களிலும் ஊழல், கொலை, கொள்ளை... இம்மாதிரி இதயத்தைக் கனக்க வைக்கும் பல செய்திகள் ஊடகங்களில் வெளியானாலும், ஊக்கத்தைத் தரும் சில நல்ல செய்திகளும் வெளியாவதை நாம் மறுக்க முடியாது. இந்த நல்ல செய்திகளை வாசிக்கும் போது நமது மனதிற்கும் ஓர் ஆறுதல் கிடைக்கிறது. நல்ல எண்ணங்களும் நல்ல உணர்வுகளும் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டுக்குச் சில செய்திகளைக் கேட்போமே.
கடந்த ஆண்டில் லிபியாவில் முவாமர் கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இடம் பெற்ற மோதல்களில் சிறாரின் கல்விப் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின்னர், குறைந்தது 12 இலட்சம் மாணவ மாணவியர் இச்சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றுள்ளனர். லிபிய கல்வி அமைச்சகம், 2 கோடியே 70 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு கோடிப் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை, ஐ.நா.வின் யூனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
RealAudioMP3 2010ம் ஆண்டில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில், யூனிசெப் நிறுவனம் 35 பள்ளிகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. இதில் சுமார் 4,500 சிறார் படிக்கின்றனர்.
RealAudioMP3 மாசிடோனியக் குடியரசின் அதிகாரப்பூர்வப் பெயர் குறித்து இக்குடியரசுக்கும் கிரீஸ் நாட்டுக்கும் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஐ.நா.வின் தலைமையில் வருகிற 16ம் தேதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு இவ்விரு நாடுகளுமே இசைவு தெரிவித்துள்ளன.
இலங்கையில் இடம் பெற்ற சண்டையில், கிழக்குப் பகுதியில், உடல் உறுப்புக்களை இழந்துள்ள சிறார்களின் வாழ்வை முன்னேற்றும் நோக்கத்தில் “அன்புத்துளிர்” என்ற அமைப்பு தனது நற்பணிகளை இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ளது. இந்த அமைப்பானது, புலம்பெயர்ந்து வாழும் உறவுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. “துளிர்விடும் தளிர்களுக்குக் கரம் கொடுப்போம்” என்ற இலக்கினைக் கொண்டு இது செயல்படத் தொடங்கியுள்ளது.
இராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இத்திங்களன்று துவங்கியுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட உள்ளதாக உறுதி அளித்துள்ளார். இம்மாநாட்டில் சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 1,900 பேர் கலந்து கொள்கின்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் 779 பள்ளிகளில் கழிவறைகள் கட்ட 39 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதற்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுய்க்கிற்கு (John Pennycuick) லோயர் கேம்ப் பகுதியில் ஒரு கோடி ரூபாய்ச் செலவில் மணிமண்டபம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த மணிமண்டபத் திறப்பு விழாவிற்கு பென்னிகுய்க்கின் பேரன் அழைக்கப்படுவார் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்த பென்னிகுய்க், இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஓர் அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பிவிட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று இவர் திட்டமிட்டார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய்த் திட்ட மதிப்பீட்டில் 1895 ம் ஆண்டு அக்டோபர் 11 ம் தேதியன்று அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கனமழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்ற பல்வேறு இன்னல்களையும் பொருட்படுத்தாமல், இவ்வணையை மூன்று ஆண்டுகளாகக் கட்டி வந்தார் பென்னிகுய்க். இந்த மூன்று ஆண்டுகளில் இவ்வணை பாதிக் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில், அது அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்தது. எனவே கர்னல் பென்னிகுய்க், இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார் என்பது வரலாறு.
இச்சனிக்கிழமை ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் முடிவுற்ற 99வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், ‘‘பிரபஞ்சம் உருவாகக் காரணமான அடிப்படைத் துகள்கள் பற்றி ஆய்வு செய்ய, தேனி மாவட்டத்தில் 1,350 கோடி ரூபாய் செலவில் ‘நியூட்ரினோ அணு துகள் ஆய்வு மையம்‘ (Neutrino Observatory) அமைக்கப்படும்” என்று கூறினார். 5 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 15 ஆயிரத்துக்கு அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
"சாதித்துக் காட்டுவேன்... சம்பாதித்துக் காட்டுவேன்!" என்று கூறியிருக்கிறார், 2012 ம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் மாற்றுத்திறனாளி நூர்தீன். சென்னை இராயபுரத்தைச் சேர்ந்த இவர், ''சாதனை பண்ணுவதற்கு உடம்பைவிட உறுதியான மனதுதான் தேவை!'' என்று நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார். இவரின் இந்த நல்ல எண்ணம்தான், கடந்த ஆண்டில் இடம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியப் போட்டிகளில் சக்கர நாற்காலி வாள் சண்டையில் வெண்கலப் பதக்கம் பெற வைத்துள்ளது. நூர்தீன் சொல்கிறார் –
''போலியோவால் எனது இரண்டு கால்களும் சிறிய வயதிலே ஊனமாகிவிட்டன. இந்த உடம்பை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் அங்கேயும் இங்கேயுமாகத் தவழ்ந்து கொண்டு இருந்த எனக்கு, எனது நண்பனுடைய ஜிம்தான் சாதனைக்கான அடித்தளத்தை அமைத்துத் தந்தது. ஆறு மாதம், உடற்பயிற்சிக்கூடமே கதியெனக் கிடந்தேன். கொஞ்சம் கொஞ்சமாகப் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். மாற்றுத்திறனாளிகளுக்கான“மிஸ்டர் தமிழ்நாடு” பட்டத்தையும் தட்டினேன். இப்போது பொதுப்பிரிவு ஆட்களோடும் போட்டிப் போட்டு பதக்கம் வாங்கிக் கொண்டு வருகிறேன்” என்று.
அன்பர்களே, இம்மாதிரியான செய்திகளை வாசிக்கும் போது நம்மையும் அறியாமல் நம் உள்ளத்தில் நல்ல உணர்வுகளும், புதுத்தெம்பும், புதிய உற்சாகமும் ஏற்படுகின்றன. இப்புதிய ஆண்டில் நம்மை உற்சாகப்படுத்தும் நல்ல செய்திகளை வாசித்து, நல்ல எண்ணங்களால் நம்மை நிரப்புவோம்.
அந்த அலுவலகத்தில் வேலையில் சேர்வதற்காக ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது. பலவிதமான தேர்வுகள் முடிந்து அறிவுக்கூர்மைத் தேர்வு ஆரம்பமாகியது. அப்போது அதிகாரி, அந்த ஆளிடம், நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிர்ப்பதம் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கேள்வியைத் தொடங்கினார். “ஒளி” என்றார் அதிகாரி.
“இருட்டு” என்றார் அந்த ஆள்.
“Very Good” என்றார் அதிகாரி.
“Very Bad” என்றார் அந்த ஆள்.
சிரித்துவிட்ட அதிகாரி, அட “அது இல்லேப்பா” என்று சொல்ல,
“அட, அது தாம்பா” என்றார் அந்த ஆள்.
எரிச்சலான அதிகாரி, “அதை விடு” என்று சொல்ல,
“அதை விடாதே” என்றார் அந்த ஆள்.
நொந்து போன அதிகாரி, “அசிங்கம்” என்று சொல்ல,
“சிங்கம்” என்றார் அந்த ஆள்.
“தப்பு” என்று சொல்ல,
“சரி” என்றார் அந்த ஆள்.
“வாயை மூடு” என்று சொல்ல,
“வாயைத் திற” என்றார் அந்த ஆள்.
“வெளிய போய்த் தொலை” என்று சொல்ல,
“உள்ளே வந்து தொலையாதே” என்றார் அந்த ஆள்.
கோபமான அதிகாரி,
“உனக்கு வேலை கிடையாது, போ” என்று சொல்ல,
“எனக்கு வேலை கிடைக்கும், வா” என்றார் அந்த ஆள்.
அந்த நேர்முகத் தேர்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதலாளி, அந்த ஆளுக்கே வேலையைப் போட்டுக் கொடுத்தாராம்.
நல்லதையே நினைத்து, நல்லதையே கேட்டு, நல்லதையே பேசி, நல்லதையே செய்வது, உடலுக்கும் மனதுக்கும் எவ்வளவு பலன்தரும் என்பதை அனுபவத்தால்தான் உணர முடியும்.







All the contents on this site are copyrighted ©.