2012-01-07 13:36:29

விசுவாச ஆண்டைக் கொண்டாடுவதற்கு உதவும் திருப்பீடத்தின் மேய்ப்புப்பணி சார்ந்த பரிந்துரைகள்


சன.07,2012. இவ்வாண்டு தொடங்கும் விசுவாச ஆண்டை உலகளாவியத் திருஅவையின் அனைத்து நிலைகளிலும் எவ்வாறு கொண்டாடுவது என்பதற்கு உதவும் மேய்ப்புப்பணி சார்ந்த பரிந்துரைகளை இச்சனிக்கிழமை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
கத்தோலிக்கர் தங்களது விசுவாசத்தை நன்றாகவும் சரியாகவும் புரிந்து கொண்டு கிறிஸ்துவுக்கு உண்மையான சட்சிகளாக மாறுவதற்கு உதவும் நோக்கத்தில் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் இப்பரிந்துரைகள் கொண்ட ஏட்டை வெளியிட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் அடங்கிய முழு ஏடும், இச்சனிக்கிழமை வெளியிடப்படும் என்று இவ்வியாழனன்றே இப்பேராயம் அறிவித்திருந்தது.
உலகளாவியத் திருஅவை, ஆயர் பேரவைகள், மறைமாவட்டங்கள், பங்குகள், இயக்கங்கள், பக்த சபைகள் என எல்லா நிலைகளிலும் இவ்விசுவாச ஆண்டைக் கொண்டாடுவதற்கென, ஒவ்வொரு நிலைக்கும் பத்துப் பரிந்துரைகளை இவ்வேடு வழங்கியுள்ளது.
“கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்குப் புதிய நற்செய்திப்பணி” என்ற தலைப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 13வது அனைத்துலக ஆயர் மாமன்றத்தைக் கூட்டுவது, இவ்விசுவாச ஆண்டின் தொடக்கமாக உலகளாவியத் திருஅவையில் முக்கிய நிகழ்வாக இடம் பெறும் எனவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பமானதன் ஐம்பதாம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, வருகிற அக்டோபர் 11ம் தேதி ஆடம்பரத் திருவழிபாட்டுக் கொண்டாட்டம் இடம் பெறும் எனவும் அவ்வேடு கூறுகிறது.
மேலும், இந்த விசுவாச ஆண்டில் திருப்பீடத்துக்கும் புனித பூமிக்கும் திருப்பயணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும், 2013ம் ஆண்டு ஜூலையில் ரியோ டி ஜெனிரோவில் இடம் பெறும் அனைத்துலக இளையோர் தினம், இளையோர் இயேசுவில் விசுவாசம் வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், திருத்தந்தை மற்றும் திருஅவை என்ற பெரிய குடும்பத்தோடு ஒன்றிப்பு உணர்வு கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பை வழங்கும் எனவும் அவ்வேடு தெரிவிக்கிறது.
திருஅவைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அன்னை மரியா மீது சிறப்புப் பக்தியைக் காட்டவும், பெரிய மரியாத் திருத்தலங்களுக்குத் திருப்பயணங்கள் மேற்கொள்ளவும் இவ்வேடு பரிந்துரைக்கிறது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பமானதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி இவ்விசுவாச ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி ஆரம்பமாகும் இவ்விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.