2012-01-06 15:13:16

திருத்தந்தை : கடவுளின் இதமான மொழியை கூர்ந்தறியும் இதயத்தைக் கொண்டவர்களாக ஆயர்கள் விளங்க வேண்டும்


சன.06,2012. கடவுளின் இதமான மொழியை கூர்ந்தறியும் இதயத்தைக் கொண்ட மனிதர்களாவும், உண்மையைப் பகுத்து அறியக்கூடியவர்களாகவும் ஆயர்கள் விளங்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை நிகழ்த்திய திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியில் இரண்டு புதிய திருப்பீடத் தூதர்களைப் பேராயர்களாகத் திருநிலைப்படுத்தி மறையுரை ஆற்றிய திருத்தந்தை, ஆயர்கள் கடவுளின் உண்மை வழியில் செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டுமென்று கூறினார்.
கடவுளை அறியும் ஒருவரால் மட்டுமே பிறரைக் கடவுளிடம் இட்டுச் செல்ல முடியும் என்றும் கூறிய திருத்தந்தை, மனிதருக்காக ஏங்கும் கடவுளைப் பெற்று, பின்னர் மனிதருக்கு அவரையே வழங்குவது ஆயர்களுடைய பணியாகும் என்றும் கூறினார்.
விண்மீன்கூட்டம் அல்லது சூப்பர்நோவா அல்லது வால்விண்மீன் என, கீழ்த்திசை மூன்று ஞானிகளை வழிகாட்டிய விண்மீன் பற்றி வல்லுனர்கள் பலவாறு பேசினாலும், நம்மை வழிநடத்தும் உண்மையான சூப்பர்நோவாவாகிய மாபெரும் விண்மீன் இயேசு கிறிஸ்துவே என்றும் திருத்தந்தை கூறினார்.
புனிதர்கள் கடவுளின் விண்மீன்கள் என்றும் உரைத்த அவர், கடவுளின் ஒளியை உலகுக்குக் காட்டுவதற்கானப் பணியைப் பெற்றுள்ள ஆயர்கள், தங்கள் பணியைத் திறம்படச் செய்வதற்குப் புனிதர்களின் பரிந்துரையை வேண்டுவோம் எனத் தெரிவித்தார்.
அயர்லாந்துக்கானப் புதிய திருப்பீடத் தூதர் பேரருட்திரு Charles John Brown, ஜார்ஜியா மற்றும் அர்மேனியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேரருட்திரு Marek Solczynski ஆகிய இருவரையும் இப்பெருவிழாத் திருப்பலியில் பேராயர்களாகத் திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.