2012-01-05 15:08:20

விசுவாச ஆண்டிற்கானத் திட்டங்கள் வெளியிடப்படவுள்ளன


சன.05,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக, இவ்வாண்டு அக்டோபர் 11ம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ள விசுவாச ஆண்டிற்கானத் திட்டங்களைத் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் இச்சனிக்கிழமை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசுவாச வாசலைத் தேடும் மக்களுக்கு உதவக் கூடியவர்களாக நாம் அனைவரும் மாறும் பொருட்டு, நம்பிக்கைக்குரிய மகிழ்ச்சிநிறை சாட்சிகளாகவும் விசுவாசத்தை மீண்டும் கண்டு கொள்பவர்களாகவும், இயேசுவை நோக்கிய நம் மனமாற்றத்தை புதுப்பிப்பவர்களாகவும் வாழ இவ்விசுவாச ஆண்டின் நடவடிக்கைகள் உதவும் என்றும் அப்பேராயம் கூறியது.
வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, “கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்குப் புதிய நற்செய்தி அறிவிப்பு” என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதையும் இப்பேராயம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அகில உலகத் திருஅவை, ஆயர் பேரவைகள், மறைமாவட்டங்கள், பங்குத்தளங்களும் இயக்கங்களும் என நான்கு படிகளில் இந்த விசுவாச ஆண்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு, திருத்தந்தை 2ம் ஜான் பால் வெளியிட்ட, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி நூலின் இருபதாம் ஆண்டு போன்றவையும் இந்த விசுவாச ஆண்டில் சிறப்பிக்கப்படும் எனவும் அப்பேராயம் கூறியது.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.