2012-01-05 15:09:46

திருத்தந்தை வழங்கிய 45வது உலக அமைதி நாள் செய்தியை ஆதரித்து பாகிஸ்தானில் அமைதி ஊர்வலங்கள்


சன.05,2012. புத்தாண்டு நாளுக்கென ‘நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கல்வி புகட்டுவது’ என்ற மையக்கருத்தில் 45வது உலக அமைதி நாள் செய்தியை திருத்தந்தை வழங்கியதை ஆதரித்து பாகிஸ்தானின் பைசலாபாத் மற்றும் தாண்ட்லியான்வாலா (Tandlianwala) ஆகிய இரு இடங்களில் அமைதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
Peace and Human Development (PHD) மற்றும் Association of Women for Awareness and Motivation (AWAM) என்ற இருவேறு அமைப்புக்களால் நடத்தப்பட்ட இந்த ஊர்வலங்களில் இளையத் தலைமுறையைச் சார்ந்த கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் கலந்து கொண்டனர்.
இளைய தலைமுறையை நீதியிலும் அமைதியிலும் வளர்ப்பதற்கு கல்வி ஒரு முக்கிய வழி என்று திருத்தந்தை கூறியிருப்பது மிகவும் பொருத்தமானதே என்று ஊர்வலத்தில் கலந்து கொண்ட நசீம் அந்தனி கூறினார்.
மனித உரிமைகள், அமைதி, ஒப்புரவு, மத நல்லிணக்கம் ஆகிய பல அழகிய அம்சங்கள் பாகிஸ்தானில் பாடத்திட்டங்களாக வழங்கப்படுவது அவசியம் என்றும் நசீம் அந்தனி எடுத்துரைத்தார்.
பல மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்ட பாகிஸ்தானில் சகிப்புத் தன்மையை வளர்க்கும் முயற்சிகளில் அரசு பெருமளவு ஈடுபடவேண்டும் என்று AWAM அமைப்பின் தலைவர் நாசியா சர்தார் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.