2012-01-04 15:32:12

சீனாவில் முதன் முதலாக கத்தோலிக்கத் திருமறையைத் தழுவிய Paul Xu Guangqi பிறந்த 450ம் ஆண்டு இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது


சன.04,2012. சீனாவில் முதன் முதலாக கத்தோலிக்கத் திருமறையைத் தழுவிய Paul Xu Guangqiன் வாழ்க்கையைப் பின்பற்றி, சீனக் கலாச்சாரத்தையும், கத்தோலிக்க விசுவாசத்தையும் இணைக்க விசுவாசிகள் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று Shanghai மறைமாவட்ட ஆயர் Aloysius Jin Luxian வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயேசு சபையைச் சேர்ந்த 95 வயது நிரம்பிய ஆயர் Jin Luxian, சனவரி 23 அன்று ஆரம்பமாகும் சீனப் புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ள மேய்ப்புப் பணி மடலில் தான் Xu Guangqiன் எண்ணங்களையும் வாழ்வையும் ஆர்வமாய் பின்பற்றுகிறவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
கத்தோலிக்கத் திருமறையின் முதல் திருத்தூதராக சீனாவில் பணியாற்றிய இயேசுசபை குரு Matteo Ricciயினால் திருமுழுக்கு பெற்ற Xu Guangqi பிறந்த 450ம் ஆண்டு 2012ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது என்பதை ஆயர் Jin Luxian இம்மடலில் மக்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.
சீனக் கலாச்சாரமும் கத்தோலிக்க விசுவாசமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல என்பதை தன் விசுவாச வாழ்வால் உணர்த்திய Xu Guangqi வெறுப்பை வெளிப்படுத்தும் வழிகள் மேலும் வெறுப்பையே வளர்க்கும் என்பதை நமக்குச் சொல்லித் தருகிறார் என்று ஆயரின் இம்மடல் சுட்டிக்காட்டுகிறது.
Xu Guangqiன் 450ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் அவர் வாழ்ந்த இடங்களைப் பார்வையிடவும், அவரது பரிந்துரையால் நடைபெறும் புதுமைகளை வெளிப்படுத்தவும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆயர் Jin Luxian.








All the contents on this site are copyrighted ©.