2012-01-03 15:08:49

இந்த ஆண்டிலாவது ஒரிஸ்ஸா கிறிஸ்தவர்களுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் - அனைத்திந்திய கிறிஸ்தவ அவை


சன.03,2012. வன்முறைகளுக்கு உள்ளான கிறிஸ்தவர்களுக்கு புலர்ந்திருக்கும் இந்த ஆண்டிலாவது தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்று ஒரிஸ்ஸாவில் வாழும் கிறிஸ்தவர்கள் கூறியுள்ளனர்.
புத்தாண்டையொட்டி புபனேஸ்வரில் கூடி வந்த அனைத்திந்திய கிறிஸ்தவ அவை, கிறிஸ்தவர்கள் அரசிடம் சமர்ப்பித்த 3500க்கும் அதிகமான முறையீடுகளில் அரசு இதுவரை 68 வழக்குகளுக்கே தீர்வு வழங்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
அனைத்திந்திய கிறிஸ்தவ அவை, FIDES செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள புள்ளி விவரங்களின்படி, கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்த ஆயிரக்கணக்கான முறையீடுகளில் காவல் துறையினர் 827 புகார்களை ஏற்றுக்கொண்டனர் என்றும், அவற்றில் 68 வழக்குகளில் 412 பேர் மட்டுமே குறைந்தபட்சம் தண்டனை பெற்றுள்ளனர், மற்றும் 1900க்கும் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த வன்முறைகள் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டாலும், ஒரிஸ்ஸாவில் வாழும் 56,000 கிறிஸ்தவர்களுக்கு இன்னும் பாதுகாப்பும், நல் வாழ்வும் அமையவில்லை என்று அனைத்திந்திய கிறிஸ்தவ அவையின் பொதுச் செயலர் ஜான் தயாள் கூறினார்.
2008ம் ஆண்டு நடைபெற்ற வன்முறைகளுக்கு சாட்சிகளாய் இருப்பவர்களைப் பாதுகாத்து வந்த Rabindra Parichha என்ற கத்தோலிக்கத் தலைவர் அண்மையில் கொல்லப்பட்டது அங்கு நிலவும் பாதுகாப்பற்றச் சூழலை விளக்குகிறது என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.