2012-01-02 14:39:09

வாரம் ஓர் அலசல் – கனவுகள் நனவாக....


சன.02,2012. புதியதோர் ஆண்டு புலர்ந்துள்ளது. இந்தப் புதிய ஆண்டிற்கு நாம் நம் நண்பர்களுக்கும் உற்றார் உறவினருக்கும் மற்றவர்களுக்கும் விதவிதமான வாழ்த்துக்களை வழங்கியிருப்போம். நமக்கும் நமது நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரிடமிருந்து விதவிதமான வாழ்த்துக்கள் வந்திருக்கும். அவற்றை வாசித்தும், தொலைபேசி வழியாகக் கேட்டும் மகிழ்ச்சியடைந்திருப்போம். எனக்கு ஒரு வாழ்த்து இப்படி வந்திருந்தது. “இந்தப் புதிய ஆண்டின் புதிய நாள், வரவிருக்கும் பல நேர்த்தியான நாட்களின் தொடக்கமாக இருக்கட்டும். உங்களது நம்பிக்கைகளும் கனவுகளும் நிறைவேறுவதன் ஆரம்பமாக இருக்கட்டும். நீங்கள் நலமாகவும், மகிழ்வாகவும் அமைதி நிறைந்தும் வாழ வாழ்த்துகிறேன். கடந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கையில் கடவுள் நல்லவராக இருந்தார். அவர் தொடர்ந்து இந்த 2012ம் ஆண்டிலும் உங்கள் வாழ்க்கையின் உயர்விலும் தாழ்விலும் தொடர்ந்து உடன் இருப்பார். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் அவர் உங்களோடு பயணிப்பார்”. அன்பர்களே, நாம் ஒவ்வொருவரும், இந்தப் புதிய 2012ம் ஆண்டை கடவுள் நம்பிக்கையில்தான் தொடங்கியுள்ளோம். இவ்வேளையில் புதிய நம்பிக்கைகள், புதிய எதிர்பார்ப்புகள் எனப் பல எண்ணங்கள் நம்மில் இருந்தாலும், இவை அனைத்திலும் கடவுளே துணைவருபவர். இந்த 2012ம் ஆண்டு நன்மைகள் தரும் ஆண்டாக, நல்ல பல நிகழ்ச்சிகள் நடக்கும் ஆண்டாக அமையும் என்ற நல்ல சிந்தனையில் வளர முயற்சிப்போம். நேர்மறைச் சிந்தனைகளும் நேர்மறை எண்ணங்களும் எப்போதுமே வாழ்வை வளமாக்குபவை.
Anne Boisvert என்பவர் சொல்கிறார் – நேர்மறையோ எதிர்மறையோ, மகிழ்ச்சியோ துயரமோ, வெற்றியோ தோல்வியோ, ஆக்கமோ அழிவோ, விடுதலையோ சிறைவாழ்வோ, தலைவரோ தொண்டரோ, உறுதியாக இருப்பதோ பாதுகாப்பற்று இருப்பதோ, உண்மையோ கட்டுக்கதையோ, அணைத்துக் கொள்வதோ உதறித் தள்ளுவதோ, ஏற்பதோ தீர்ப்பிடுவதோ, பலமானதோ பலவீனமானதோ, வருங்காலமோ கடந்த காலமோ, கட்டுவதோ அழிப்பதோ, முன்னோக்கிச் செல்வதோ பின்னோக்கிச் செல்வதோ, பயமின்றியோ பயமுடனோ, பாதி முழுமையாகவோ பாதி காலியாகவோ..... என்று. இந்தக் கவிஞர் சொல்வது போல, வாழ்க்கையை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ வாழ்வது நாம் ஒவ்வொருவரும் தேர்ந்து கொள்ளும் வாழ்வுமுறையைப் பொருத்தது. நாம் அனைவருமே, ஏதாவது ஒரு வழியில் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
நமது தினசரி வாழ்க்கையை எடுத்துக் கொள்வோமே. காலையில் படுக்கையிலிருந்து எழும்புவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும்வரைப் பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டுமா அல்லது படுத்திருக்க வேண்டுமா, அல்லது இன்று நான் வேலைக்குச் செல்ல வேண்டுமா அல்லது வீட்டிலேயே இருக்க வேண்டுமா, இன்று நான் எந்த நிற ஆடையை உடுத்த வேண்டும் ... இப்படி ஒவ்வொரு நாளும் பல காரியங்களை நாமே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நாளில் நாம் என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கிறோமோ அதைப் பொருத்துத்தான் அன்றைய வாழ்வு அமையும். சரியான தீர்மானங்கள் எடுத்தால் அன்றைய நாளின் செயல்களும் சரியான முடிவை வெளிக்கொண்டு வரும். இன்றைய நாளில் எல்லாமே நன்றாக அமையும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் அந்த நாள் அப்படியே நன்றாகவே அமையும். இன்றைய நாளில் நான் எனது எண்ணங்களையும் உணர்வுகளையும் எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கையில் அன்றைய நாளைத் தொடங்கினால் அந்த நாள் பதட்டமின்றி முடிவுக்கு வரும். அன்பர்களே, இவ்வாறு சொல்லும் உளவியல் ஆசிரியர்கள், எதிர்மறையான எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்மறையான எண்ணங்களில் நமது கவனத்தைச் செலுத்தாமல், நேர்மறையான எதிர்பார்ப்புக்கள் மற்றும் நேர்மறையான எண்ணங்களில் நமது கவனத்தை வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அந்த ஊரில் அம்மா, அப்பா, இரண்டு குழந்தைகள் என ஒரு நடுத்தரக் குடும்பம் வாழ்ந்து வந்தது. கணவனும், மனைவியும் அமைதியானவர்கள். ஆனால் அவர்களின் இரு குழந்தைகளும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள். நாள்கள் செல்லச் செல்ல, அவர்கள் முரட்டு குணம் உள்ளவர்களாக மாறி வந்தார்கள். பெற்றோர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவர்களது குணத்தை மாற்ற முடியவில்லை. அந்தச் சமயத்தில் அவர்கள் ஊருக்கு ஒரு மகான் வந்தார். ஒருநாள் இந்தத் தந்தை அந்த மகானைப் போய்ப் பார்த்தார். தன் குழந்தைகளைப் பற்றி சொன்னார். பொறுமையாகக் கேட்ட மகான், “கடுகு கம்பு” என்ற ஒரு மந்திரத்தை அவருக்குக் கற்றுத் தந்தார். அவரும் நல்லது நடக்கும் என்ற ஒரு சிந்தனையோடு வீடு திரும்பினார். குழந்தைகள் சண்டைபோட ஆரம்பித்தவுடன் அவர் அந்த மந்திரத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார். எப்படி எனக் கேட்கிறீர்களா? பிள்ளைகளுக்குள் சண்டை தொடங்கியவுடன், அவர் சிறிதளவு கடுகையும், சிறிதளவு கம்புதானியத்தையும் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு தன் பிள்ளைகளைக் கூப்பிட்டார். அவர்கள் இருவரிடமும் கடுகு-கம்பு கலவையைக் கொடுத்து, குழந்தைகளே, இதில் உள்ள கடுகையும் கம்பையும் தனித்தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டு வாருங்கள்! உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன் என்று அன்பாக சொன்னார். அவ்வளவுதான், பிள்ளைகள், சண்டை போடுவதை மறந்து அப்பா சொன்ன வேலையைச் செய்ய ஆரம்பித்தனர். அடிக்கடி இப்படிச் செய்ததில் அவர்களுக்கு அதுவே பிடித்தமான விளையாட்டானது. பின்னர் சண்டைபோடும் குணமே மாறி ஒருவர் ஒருவர் மீது அன்புகாட்டத் தொடங்கி விட்டார்கள். எப்படி நடந்தது இந்த அதிசயம்? அந்தப் பிள்ளைகளது கவனம், சண்டை போடும் எண்ணத்தில் இருந்து திசை திரும்பியதும் மனம் புதிய விடயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டது. அவ்வளவுதான்.
அன்பர்களே, நம்முடைய மனமும் அப்படித்தான். அது, தேவையற்ற எதிர்மறை எண்ணம் எதையாவது சுமந்து கொண்டு அதன் பாதையிலேயே போய்க் கொண்டு இருக்கும். நமது மனது, அந்த வேண்டாத சுமையை இறக்கிவிட்டால் நேர்மறைச்சிந்தனை மனதை வழி நடத்த ஆரம்பித்து விடும். மனம் குழப்பம் இல்லாமல் வெற்றிப் பாதையில் செல்லத் தொடங்கிவிடும். இந்த உலகில் 700 கோடிப் பேர் இருந்தும் சிலர் மட்டுமே சரித்திரம் படைப்பதற்கு இதுவே காரணம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு வீட்டிற்குத் தாகத்தோடு செல்கிறீர்கள். அவ்வீட்டில் ஒரு குவளையில் பாதி அளவு தண்ணீர் தரப்படுகிறது. நீங்கள் நேர்மறைச் சிந்தனையாளராய் இருந்தால் எப்படி நினைப்பீர்கள்?. எனது தாகத்தைத் தணிப்பதற்கு இவ்வளவு தண்ணீர் கிடைத்ததே என்று திருப்தி அடைவீர்கள். எதிர்மறை எண்ணம் உள்ளவராய் இருந்தால் ச்சே... குவளையில் தண்ணீர் பாதி அளவுதானே இருக்கிறது என்று எண்ணுவீர்கள்.
நேர்மறை எண்ணம் இருந்தால், சிறு சிறு தடைகள் வந்தாலும்கூட ஒருவர் தனது இலட்சியத்தை அடைவதைத் தடைசெய்ய முடியாது. கடந்த டிசம்பர் 10ம் தேதி இரண்டு ஆப்ரிக்கப் பெண்களும் ஓர் ஏமன் நாட்டுப் பெண்ணும் 2011ம் ஆண்டுக்கான அமைதி நொபெல் விருதைப் பெற்றார்கள். லைபீரிய நாட்டு அரசுத்தலைவர் எலன் ஜான்சன் சர்லீஃப், (Ellen Johnson Sirleaf), அதே நாட்டைச் சேர்ந்த 'அமைதிப் போராளி லெமா ப்போவீ, (Leymah Gbowee), ஏமன் நாட்டுப் பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான டவாக்கல் கார்மன் (Tawakkul Karman) ஆகிய மூன்று அமைதிப் புறாக்களும் எப்படி இவ்விருதைப் பெற முடிந்தது?. பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த எலன், 1989ம் ஆண்டில் லைபீரியாவில் முதன் முதலாக மக்கள் புரட்சி உருவானபோது, அமைதியை ஏற்படுத்தும் வேலைகளில் இறங்கினார். இதனால் நாடு கடத்தப்பட்டார். இரண்டாவது முறையாக மக்கள் புரட்சி உருவானபோது, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும் போராடினார். இதற்கெல்லாம் பரிசாக... 2005ம் ஆண்டில் மக்கள் இவருக்கு அரசுத்தலைவர் பதவியை கொடுத்து அழகு பார்த்தனர். இன்று வரை அப்பதவியில் நீடிக்கும் எலன், நாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போரின் பாதிப்பை மாற்றி, நாட்டில் அமைதி, பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் மறுமலர்ச்சி ஏற்படுவதற்காக உழைத்து வருகிறார். லைபீரியாவின் முதல் பெண் அரசுத்தலைவர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கும் எலன், ஏழைப் பெற்றோரின் பெண்ணாகப் பிறந்து, 17 வயதிலேயே திருமணமும் செய்து கொண்டவர். ஆட்சியில் அமர்ந்த பின்னரும் ஆடம்பரம் இல்லாமல் இருப்பதுதான் இவருடைய அழகும் ஆளுமையும்!
லெமா ப்போவீ... ஆறு குழந்தைகளின் தாய். ''போரினால் பாதிக்கப்பட்ட லைபீரியாவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், அது தாய்மார்களால் மட்டுமே முடியும்'' என்று உரக்கக் கோஷமிட்ட அன்னை. அதைச் செயல்படுத்தியும் காண்பித்தார். காரணம், உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குழந்தைப் போராளி அவர். மூளை பலத்தால் நாட்டில் அமைதியை நிலைநாட்டியவர்! டவாக்கல் கார்மன்... மூன்று குழந்தைகளின் தாய்; ஏமன் நாட்டின் புகழ்பெற்ற கவிஞர். WJWC (Women Journalists Without Chains) என்கிற அமைப்பை நிறுவி, பெண் பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து, அதை மனித உரிமை அமைப்பாக நிறுவினார். அரபு நாடான ஏமனில் ஒரு பெண் இப்படிப் போராடுவது குற்றம். என்றாலும், திரும்பத் திரும்ப போராடினார். ஏமனில் நடைபெற்று வரும் போராட்டத்தில், இளைஞர்களை எல்லாம் ஒருங்கிணைத்துப் போராடியதற்காகக் கைது செய்யப்பட்டார் டவாக்கல். விடுதலையாகி வெளியே வந்தும், இன்றும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார் இந்த 32 வயதேயான இளம் போராளி!
இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்று பிரிட்டனில் ஆராய்ச்சிகளை மெற்கொண்டு வருபவரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு, "Knighthood” எனப்படும் “சர்” (Sir) பட்டம் வழங்கப்படுவதாக 2011ம் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2009ம் ஆண்டில் நொபெல் வேதியல் விருது பெற்றவர். பிரித்தானிய அரசின் உயரிய சிவில் விருதான சர் பட்டம், பிரிட்டனில் இருந்து செயல்படக்கூடிய வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவதென்பது மிகவும் அரிதாகத்தான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பர்களே, இவர்கள் எல்லாருமே, நேர்மறை எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் தங்களை வார்த்தெடுத்தவர்கள். நேர்மறைச் சிந்தனையாளர், தடைக்கற்களைப் படிக்கற்களாகவே மாற்றுகிறவர். எனவே காந்தியம் சொல்வது போன்று, நேர்மறை எண்ணங்களால் அறிவை விசாலமாக்கி அகிலத்தைத் தனதாக்க இப்புதிய ஆண்டில் முயற்சிப்போம். எதிலும் எப்போதும் நல்லதே நடக்கும் என்ற நற்சிந்தனையுடன் வாழப் பழகுவோம். அப்போது இப்புதிய ஆண்டின் கனவுகள் நனவாகும். ஏனெனில் எப்படி நாம் சிந்திக்கிறோமோ அப்படியே நம் வாழ்க்கையும் அமையும்.








All the contents on this site are copyrighted ©.