2011-12-30 15:31:06

வத்திக்கான் : 2011ம் ஆண்டில் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பார்த்துள்ளனர்


டிச.30,2011. 2011ம் ஆண்டில் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பார்த்துள்ளனர் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.
திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலிகள், திருவழிபாடுகள், புதன் பொது மறைபோதகங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இலவச நுழைவுச் சீட்டுகளை வழங்கும் வத்திக்கான் நிர்வாக அமைப்பு இந்தப் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை 2ம் ஜான் பால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட திருப்பலியில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் 5 இலட்சம் பேர் நுழைவுச் சீட்டுகளுடன் பங்கு பெற்றனர் என்று அந்த வத்திக்கான் அமைப்பு கூறியது. எனினும், அந்நாளில் இந்தப் பேதுரு வளாகத்திலும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் நின்று இத்திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் பத்து இலட்சத்துக்கு அதிகம் என்று இத்தாலிய காவல்துறை கணித்துள்ளது.
2011ம் ஆண்டில் திருத்தந்தை நடத்திய 45 புதன் பொது மறைபோதகங்களில் சுமார் நான்கு இலட்சம் பேரும் ஞாயிறு மூவேளை செப உரைகளில் 12 இலட்சத்துக்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர் எனவும் வத்திக்கான் வெளியிட்ட புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
மேலும், வத்திக்கானில் திருத்தந்தை சந்தித்த சிறப்புக் குழுக்களில் சுமார் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் பேர் இருந்தனர் எனவும், திருத்தந்தை நிகழ்த்திய திருவழிபாடுகளில் சுமார் 8 இலட்சத்து 46 ஆயிரம் பேர் பங்கு பெற்றனர் எனவும் வத்திக்கான் நிர்வாக அமைப்பு கூறியது.
மொத்தத்தில், 2011ம் ஆண்டில் திருத்தந்தையைச் சந்தித்த மக்களின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டைவிட அதிகம் என்று கூறும் அவ்வமைப்பு, 2010ம் ஆண்டில் சுமார் 23 இலட்சம் பேர் திருத்தந்தையைச் சந்தித்தனர் என்று தெரிவித்தது.








All the contents on this site are copyrighted ©.