2011-12-29 14:50:38

பெண் குழந்தைகளை அழிப்பவர்கள் இன்றைய காலத்தில் வாழும் ஏரோது - கர்தினால் கிரேசியஸ்


டிச.29,2011. பெண் குழந்தைகளையும், பிற குழந்தைகளையும் கருவிலேயே அழிப்பவர்களையும், மனித உரிமைகளையும், மத உரிமைகளையும் மறுப்போரையும் இன்றைய காலத்தில் வாழும் ஏரோது என்று ஒப்புமைப்படுத்தி மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் பேசினார்.
டிசம்பர் 28, இப்புதனன்று கொண்டாடப்பட்ட மாசில்லாக் குழந்தைகள் திருநாளையொட்டி, தன் கருத்துக்களை வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின் தலைவரும், ஆசிய ஆயர் பேரவையின் பொதுச் செயலுருமான கர்தினால் கிரேசியஸ், மாசில்லாக் குழந்தைகளைக் கொன்று குவித்த ஏரோதைப் போலவே தற்காலத்திலும் அப்பாவி உயிர்களைப் போக்கும் பலர் நம் மத்தியில் இருப்பது வேதனையைத் தருகிறது என்று கூறினார்.
ஏரோதைப் போலவே தங்கள் செல்வத்தையும் சுகத்தையும் தெய்வங்களாக வழிபடும் மக்களே கருக்கலைப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றங்களை இவ்வுலகில் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர் என்று கர்தினால் கிரேசியஸ் சுட்டிக் காட்டினார்.
கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டுள்ள ஒரே காரணத்தால் துன்பங்களை அனுபவிக்கும் இந்தியக் கிறிஸ்தவர்களின் துயரங்களைக் குறித்தும் கர்தினால் கிரேசியஸ் தன் கருத்துப் பரிமாற்றத்தில் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.