2011-12-29 14:49:46

திருத்தந்தை: கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் பற்றுறுதி அனைத்து வகையான அச்சங்களினின்றும் இளையோரை விடுவிக்கும்


டிச.29,2011. மனிதர்கள் உருவாக்கும் பல்வேறு எல்லைகளைக் கடந்து இளையோராகிய நீங்கள் செபத்தால் உள்ளம் ஒன்றி இருப்பது மிகவும் அழகான ஒரு தருணம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
Taize எனப்படும் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஆயிரக்கணக்கான இளையோருடன் மேற்கொண்டுள்ள ஒரு மாநாட்டிற்கு திருத்தந்தையின் வாழ்த்துக்கள் அடங்கிய செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தோனே இவ்வியாழனன்று அனுப்பி வைத்தார்.
கிறிஸ்துவின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி அனைத்து வகையான அச்சங்களினின்றும் உங்களை விடுவித்து, இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் சக்தியை உங்களுக்கு வழங்கும் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறினார்.
உலகின் வறுமை மற்றும் அநீதிகளைக் கண்டு வெகுண்டெழும் பல்லாயிரம் இளையோர் வன்முறைகள் வழியே இவைகளுக்குத் தீர்வுகள் காண எண்ணும் வேளையில், நீங்கள் காட்டும் பற்றுறுதியும், நம்பிக்கையும் அவர்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையட்டும் என்று திருத்தந்தை வாழ்த்தினார்.
35வது ஐரோப்பிய Taize கூட்டம் வருகிற ஆண்டு உரோம் நகரில் நடைபெற உள்ளதைத் தன் செய்தியின் இறுதியில் திருத்தந்தை குறிப்பிட்டு, அக்கூட்டத்திற்கு இளையோரை வரவேற்க தான் காத்திருப்பதாகவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.