2011-12-29 15:13:14

டிசம்பர் 30 வாழ்ந்தவர் வழியில்.... ஹோசே புரட்டாசியோ ரிசால்


ஹோசே புரட்டாசியோ ரிசால் (José Protacio Rizal Mercado Realonda Y Alonso) என்பவர், பிலிப்பைன்சின் ஒரு தேசியவாதியும் எழுத்தாளரும் ஆவார். இஸ்பானிய காலனி ஆட்சிக் காலத்தில் பிலிப்பைன்சில் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தவர். ரிசால் 1896 ம் ஆண்டில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இவர் பிலிப்பைன்சின் விடுதலை வீரராகக் கணிக்கப்பட்டு இவர் இறந்த நாளை ரிசால் நாள் என்ற பெயரில் விடுதலை நாளாக பிலிப்பைன்சில் நினைவுகூரப்பட்டு வருகிறது. பிலிப்பைன்சின் லகூனா மாநிலத்தில் கலாம்பா என்ற ஊரில் 1861ம் ஆண்டு ஜூன் 19ம் நாள் பிறந்த ரிசால், மணிலா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், மத்ரித் பல்கலைக்கழகத்திலும், பின்னர் பாரிஸ் பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்தார். ஐரோப்பிய, ஜப்பானிய, அரபு, சமஸ்கிருதம் உட்பட 10 மொழிகளில் இவர் புலமை பெற்றிருந்தார். இரண்டு நாவல்களையும் எழுதினார். பிலிப்பைன்ஸ் முன்னணி என்ற பெயரில் ஓர் அமைப்பை ஆரம்பித்து அரசியலிலும் ரிசால் ஈடுபட்டார். இவ்வரசியல் இயக்கமே பின்னர் இஸ்பானியர்களுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட கட்டிபுனான் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயக்கம் தோன்றக் காரணமாயிருந்தது. ரிசால் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 1896 ம் ஆண்டில் கியூபா செல்லும் வழியில் பார்சிலோனா நகரில் கைது செய்யப்பட்டு மணிலாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார். 1896 ம் ஆண்டு டிசம்பர் 30 ம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹோசே ரிசால் கொலை செய்யப்பட்டது, பிலிப்பைன்சில் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து புரட்சி ஏற்படுவதற்கான காரணங்களுள் ஒன்றாகும். இந்நாள் பிலிப்பைன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் தேசிய விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.