2011-12-29 14:51:31

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இணைந்து முயன்றாலே இந்நாடு அமைதியில் வாழ முடியும் - நைஜீரியா நாட்டின் பேராயர்


டிச.29,2011. கிறிஸ்மஸ் அன்று தங்கள் உயிரை இழந்தவர்கள் வீணாகச் சாகவில்லை என்பதை தான் நம்புவதாகவும், தீவிரவாதிகளின் தாக்குதல்களால் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல இஸ்லாமியரும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆப்ரிக்க பேராயர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்மஸ் நாளன்று நைஜீரியா நாட்டின் அபுஜா நகரில் புனித தெரேசா ஆலயத்தில் நிகழ்ந்த வன்முறைத் தாக்குதல்களால் உயிரிழந்த மக்களைக் குறித்து FIDES செய்திக்கு பேட்டியளித்த அபுஜா பேராயர் John Olorunfemi Onaiyekan இவ்வாறு கூறினார்.
இவ்வன்முறைகளுக்குக் காரணமான Boko Haram குழுவினர் இஸ்லாமியர் அல்ல என்று பல இஸ்லாமியக் குழுக்கள் கூறிவந்தாலும், இந்த நிராகரிப்பு மட்டுமே வன்முறைகளை ஒழிக்கப் போவதில்லை என்று பேராயர் Onaiyekan சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு ஆலயங்களில் பாதுகாப்பு முயற்சிகள் பலபடுத்தப்பட்டிருந்தாலும், அபுஜா நகரில் நிகழ்ந்த தாக்குதல் தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதால், அவர்கள் குண்டுகளுடன் ஏறிவந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோரில் பலர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இளையோரே என்றும் பேராயர் வருத்தத்துடன் கூறினார்.
Boko Haram போன்ற அடிப்படைவாத, வன்முறையாளர்களால் நாட்டில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இவ்விரு மதத்தினரும் இணைந்து முயன்றாலே இந்நாடு அமைதியில் வாழ முடியும் என்றும் பேராயர் Onaiyekan வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.