2011-12-29 14:50:18

2011ம் ஆண்டில் திருத்தந்தை மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகளைக் குறித்து திருப்பீடப் பேச்சாளர்


டிச.29,2011. திருத்தந்தையர்களின் ஒவ்வோர் ஆண்டு நிகழ்வுகளைப் போலவே இவ்வாண்டும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செயல்பாடுகளும் அர்த்தமுள்ள வகையில் நிறைவேறின என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை ஃபெடெரிகோ லொம்பார்தி கூறினார்.
2011ம் ஆண்டில் திருத்தந்தை மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகளைக் குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்வாண்டு பெரும் பிரச்சனைகள் இன்றி ஓரளவு அமைதியாகக் கழிந்தது என்று கூறினார்.
திருத்தந்தை 2011ம் ஆண்டு மேற்கொண்ட பல்வேறு திருப்பயணங்களைப் பற்றி பேசிய அருள்தந்தை லொம்பார்தி, இஸ்பெயினில் நிகழ்ந்த உலக இளையோர் தினத்தில் திருத்தந்தை பங்கேற்றதும், அண்மையில் ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் அவர் மேற்கொண்ட திருப்பயணமும் நம்பிக்கை தரும் அடையாளங்கள் என்று கூறினார்.
மேலும், திருத்தந்தை அசிசி நகரில் தலைமையேற்று நிகழ்த்திய உலக அமைதி நாள் பல்சமய செப வழிபாடு குறித்தும், அண்மையில் திருத்தந்தை Rebibbia சிறைக்கூடத்திற்கு சென்றதையும் திருப்பீடப் பேச்சாளர் தன் பேட்டியில் சிறப்பான வகையில் குறிப்பிட்டார்.
2011ம் ஆண்டில் திருத்தந்தையின் மிகச்சிறந்த நிகழ்ச்சியாக உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவை என்று எண்ணிப் பார்க்கையில், மே மாதம் முதல் தேதியன்று முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களை அருளாளராக உயர்த்திய நிகழ்வும், விண்வெளி வீரர்களுடன் திருத்தந்தை உரையாடிய நேரமும் மனதில் நிற்கின்றன என்று வத்திக்கான் பத்திரிக்கை அலுவலகத்தின் இயக்குனர் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.