2011-12-28 15:44:46

நேபாளத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ்


டிச.28,2011. நேபாளத்தின் காத்மாண்டு நகரின் அன்னை மரியா பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் இணைந்து, 2000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட கிறிஸ்மஸ் திருப்பலியை நிறைவேற்றியது குறித்து காத்மாண்டு ஆயர் அன்டனி ஷர்மா தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
1000 பேர் மட்டுமே அமரக்கூடிய கோவில் நிறைந்து, மற்றுமோர் 1000 பேர் வெளியிலும் நின்றதால், வன்முறைகளுக்குப் பயந்து மூடப்பட்டிருந்த கோவிலின் கதவுகளைத் திறந்து வைத்தே திருப்பலி நிறைவேற்றியதாகவும் ஆயர் மகிழ்வுடன் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்காக இருந்த அன்னை மரியா விண்ணேற்புப் பேராலயத்தில் கிறிஸ்தவர் அல்லாதோரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டது தங்கள் நாடு ஒப்புரவை நோக்கி நடைபோடுகிறது என்பதைக் காட்டுகிறது என்று ஆயர் ஷர்மா எடுத்துரைத்தார்.
2006ம் ஆண்டு முதல் நேபாளம் மத சார்பற்ற ஒரு நாடாக மாறியது. 2006ம் ஆண்டு 6000 பேர் என்று இருந்த கத்தோலிக்கர்கள், தற்போது 10000க்கும் அதிகமாக உள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
2008ம் ஆண்டு முதல் நேபாளத்தில் கிறிஸ்மஸ் ஓர் அரசு விடுமுறையாக கொண்டாடப்படுகிறது என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக கிறிஸ்மஸ் விழாவையொட்டி பல்வேறு சமயங்களும் இணைந்து பொதுவிழாக்களை நடத்தி வருகின்றன என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.