2011-12-27 13:27:38

இராமானுஜன் பிறந்தநாள் இந்திய தேசிய கணித தினம் : பிரதமர் அறிவிப்பு


டிச.27,2011. ஒவ்வோர் ஆண்டும் கணிதமேதை இராமானுஜன் பிறந்த நாள் தேசிய கணித தினமாக கொண்டாடப்படும் என, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் "இராமானுஜன் உயர் கணித ஆய்வு மையம்" திறந்து வைக்கப்பட்ட விழாவில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், கணித உலகில் ஈடு இணையற்று விளங்கிய சீனிவாச இராமானுஜனின் 125வது பிறந்தநாளில் மையத்தை திறப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாள், ‘தேசிய கணித தினமாக’ கொண்டாடப்படும் மற்றும், வரும் 2012ம் ஆண்டை ‘தேசிய கணித ஆண்டாக’ அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
பிற துறைகளில் படிப்பவர்களுக்கும் கணிதம் மிகவும் தேவை என்பதையும் எடுத்தியம்பிய மன்மோகன்சிங், ஆர்யபட்டா, பிரம்ம குப்தா, இராமானுஜன் ஆகியோரின் சிந்தனைகளை எதிர்காலத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய இந்தியர்களின் கடமைகளையும் வலியுறுத்தினார்.
இராமானுஜன் உயர் கணித ஆய்வு மையத் தவக்க விழாவிற்கு தலைமை வகித்த தமிழக ஆளுனர் ரோசய்யா பேசுகையில், பூஜ்ஜியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நமது முன்னோர்களின் வழி வரும் இளம் ஆராய்ச்சியாளர்கள், இத்துறையில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புக்களை பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.