2011-12-27 13:31:28

அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணா நோன்பு போராட்டத்தைக் குறித்து இந்தியத் திருச்சபையில் இரு வேறு கருத்துக்கள்


டிச.27,2011. ஊழலை ஒழிக்க சமர்பிக்கப்பட்டிருக்கும் லோக்பால் சட்ட வரைவு குறித்து இந்திய பாராளு மன்றத்தில் விவாதங்கள் ஆரம்பித்துள்ள இச்செவ்வாயன்று, மும்பையில் அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணா நோன்பு போராட்டத்தைக் குறித்து இந்தியத் திருச்சபையில் இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற கருத்தை பரப்பி வரும் ஓர் அமைப்பினை உருவாக்கியவர்களில் ஒருவரான டில்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ, அன்னா ஹசாரேயின் முயற்சியைப் பாராட்டி, அவர் அரசை வலியுறுத்தி வருவது ஏற்புடையதே என்று கூறினார்.
அன்னா ஹசாரே ஆரம்பித்துள்ள உண்ணா நோன்பு போராட்டத்தில் ஏறத்தாழ 60,000 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கத்தோலிக்க மத சார்பற்ற அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோசப் டயஸ், மக்கள் ஆர்வமாய் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நாட்டுக்கு நல்லதோர் அடையாளம் என்று கூறினார்.
இந்திய அரசு இந்த விவாதத்தை மேற்கொண்டு தீர்வு காண்பதற்கு உரிய நேரத்தை அரசுக்கு அளிக்காமல் அன்னா ஹசாரே உண்ணா நோன்பை மேற்கொண்டிருப்பது, மக்களின் உணர்வுகளை அதிகமாக தூண்டிவிடும் ஆபத்தான ஒரு போக்கு என்று ஆசிய ஆயர்கள் பேரவைகள் பொது நிலையினர் அமைப்பின் செயலர் Virginia Saldanha கூறினார்.
இந்த விவாதங்களுக்குப் பிறகு, அரசு நல்லதொரு முடிவை எட்டாதபோது அன்னா ஹசாரே தன் போராட்டத்தை மேற்கொள்வது இன்னும் போருளுள்ளதாக இருந்திருக்கும் என்று Saldanha சுட்டிக் காட்டினார்.
ஹசாரே எடுத்திருக்கும் முயற்சிகளில் ஒரு சில அடிப்படை வாத இந்துத்துவ குழுக்கள் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டி ஒரு சில கிறிஸ்தவ தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.