2011-12-26 14:27:32

வாரம் ஓர் அலசல் - 2011ம் ஆண்டு - ஓர் அலசல்


டிச.26, 2011. அன்பு நேயர்களே, 2011ம் ஆங்கிலப் புத்தாண்டு ஒரு சனிக்கிழமை மலர்ந்த போது நாம் ஒவ்வொருவருமே பல கனவுகளோடும் நனவுகளோடும் அந்த ஆண்டை வரவேற்றோம். இந்த 2011ம் ஆண்டு இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடையப் போகின்றது. இந்த ஆண்டில் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் மனதுக்கு இனிய நிகழ்வுகளும் மனதை நெருட வைத்த நிகழ்வுகளும் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றை எண்ணிப் பார்க்கும் இந்த நாட்களில், உலகின் அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளையும் அலசுவது 2011ம் ஆண்டின் இந்த நமது இறுதி வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி பேராசிரியர் முனைவர் பெர்னார்டுசாமி அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம். சென்னை இலொயோலாக் கல்லூரியின் வரலாற்றுயியல் பேராசிரியராகிய இவர், ஒரு நல்ல சமூகப் பார்வையாளர். பேராசிரியர் பெர்னார்டுசாமி அவர்களின் அலசலை முதலில் கேட்போம். RealAudioMP3

2011ம் ஆண்டில் சில அரபு நாடுகளில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களாட்சி என்ற புதிய வசந்தம் மலர்ந்துள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்தில் பல ஆண்டு உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டிருந்த தென் சூடான், புதிய ஒரு நாடாக ஐ.நாவில் இணைந்துள்ளது. பாலஸ்தீனம் யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தாலி போன்ற நாடுகளில் அரசுகளின் நிதிப்பற்றாக்குறையைக் களைய புதிய சிக்கன முறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் இலஞ்ச ஊழல் ஒழிப்பு முயற்சிகள் தொடங்கியுள்ளன. புதிய 2012ம் ஆண்டில் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்கும் நாம் ஒவ்வொருவரும் முதலில் அந்த நல்மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்குவோம். மகாத்மா காந்தி சொன்னார் – ஒருவர் தன்னில் மாற்ற விரும்புவதை முதலில் அவர் தன்னிடமிருந்தே தொடங்க வேண்டும் என்று. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது நமது மன சக்தியே. எனவே நமது மனசக்தியைப் பலப்படுத்திப் புலரும் 2012ம் ஆண்டில் வீட்டிலும் நாட்டிலும் நல்லதொரு சூழலை உருவாக்க முயற்சிப்போம். நடந்தவையெல்லாம் நன்மைக்கே. நடப்பவையும் நன்மைக்கே. நடக்கவிருப்பவையும் நன்மைக்கே.








All the contents on this site are copyrighted ©.